பயனர்கள்.

ript>

சனி, 23 அக்டோபர், 2010

மட்டக்களப்பில் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலைககும் எனக்கும் தொடர்பு கிடையாது-பிரதியமைச்சர் முரளிதரன்..!!

கடந்தகால விடயங்களைக் கிளறுவதைவிட எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுப்பது அவசியம். 1990ம் ஆண்டு மட்டக்களப்பில் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது, அக்காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன் என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வி.முரளிதரன் மேலும் கூறியதாவது, மட்டக்களப்பில் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கிடையாது. 1990ம் ஆண்டு ஜூன்மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றபோது நான் அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் பொட்டு அம்மான், கரிகாலன் மற்றும் நியூட்டன் ஆகியோர் கிழக்குப் பிராந்தியத்தை வழிநடத்தினார்கள். கடந்த 30ஆண்டுகளாகத் தொடர்ந்த யுத்தத்தினால் ஏற்பட்ட பேரவலங்களுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனே பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் குறைக்கப்பட வேண்டும்-ஐ.தே.கட்சி..!!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் குறைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றம் சுயாதீனக் குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோருக்கான கட்டுப்பணத் தொகை குறைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கட்டுப்பணம் அதிகரிக்கப்படுவதனால் வறியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத ஓர் சூழ்நிலை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு கட்டுப்பணத் தொகை அதிகரிப்பினால் சதாரண மக்களின் ஜனநயாக உரிமை முடக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தேச உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத் திருத்தங்களின்படி அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் 5000 ரூபாவினையும், சுயாதீனக் குழு வேட்பாளர் ஒருவர் 20,000 ரூபாவினையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்யத் தயார்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!!

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பங்களிப்புச் செய்யத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் நேரடியாக பங்களிப்புச் செய்தால் பாரியளவிலான உதவிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாடுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து அதிகளவான உதவிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முடியும். மீள்குடியேற்ற மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்பான நம்பிக்கைத் தன்மையும் வலுப்பெறும். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் தமது இயல்வு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. அவர்களது அபிவிருத்தி நடவடிக்கைகளில் நேரடியானதும், காத்திரமானதுமான பங்களிப்பை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் அடுத்த படம் ஹரா..!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான சுல்தான் தி வாரியர் தலைப்பு ஹரா என்று மாற்றப்பட்டுள்ளது. தன் மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இதனால், சுல்தான் என்கிற ஹராவின் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. சௌந்தர்யா ரஜினியின் இயக்கத்தில், எந்திரனுக்கு முன்பே துவங்கிய இந்த அனிமேஷன் படத்தின் வேலைகள், எந்திரன் ரிலீசுக்காக தள்ளி வைக்கப்பட்டன.
ரஜினி நடிக்கும் காட்சிகளை கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார்இந்தப் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகளை கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார். மீதி அனிமேஷன் வடிவில் வரும் காட்சிகளை சௌந்தர்யா கவனிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பாடல்களையும் ரவிக்குமாரே படமாக்குவார் என்று தெரிகிறது.
அவதார் படத்தின் தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி ஹராவின் அனிமேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. முழுப் படமும் 3 டி-யிலேயே வெளிவருவது ஹராவின் சிறப்பு. இந்தியாவில் வெளியாகும் முதல் 3 டி அனிமேஷன் படம் சுல்தான் என்கிற ஹராதான் என்பது குறிப்பிடத்தக்கது. அனிமேஷன் ரஜினி தவிர்த்து, இன்னொரு ரஜினியும் வருகிறார். அது நிஜ ரஜினி. குறிப்பிட்ட சில காட்சிகளில் அனிமேஷன் ரஜினியுடன் நிஜ ரஜினியும் வருவதுபோல படமாக்கியுள்ளாராம் சௌந்தர்யா. இந்த அசல் ரஜினி காட்சிகள் மட்டும் படத்தில் 20 நிமிடங்கள் இடம் பெறுகின்றனவாம்.அதுமட்டுமின்றி இன்னொரு ரஜினியும் படத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம் முக்கியமான சஸ்பென்ஸாக இருக்கும்.

பொதுநலவாய பிரதிநிதிகள் அரசுக்குப் பாராட்டு..!!

மோதல்கள் காரணமாக லட்சக்கணக்காக இடம்பெயர்ந்த மக்களை ஒரே மாவட்டத்தில் முகாம்களில் சகல வசதிகளுடனும் தங்கவைத்ததுடன் மட்டுமல்லாமல் படிப்படியாக அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பணியை பொதுநலவாய பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர். உலக நாடுகளில் எங்கும் இல்லாதவாறு மூன்றாம் உலக நாடான இலங்கை ஒரு சிரமமான பணியை மிகச்சிறப்பாக செய்துமுடித்துக் கொண்டிருக்கிறது என பொதுநலவாய பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக வவுனியா அரசஅதிபர் திருமதி பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் மீளக்குடியமரும் மக்களுக்கு பொதுநலவாய நாடுகளின் உதவி அவசியம் என்பது பற்றியும் அரச திபர் திருமதி சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு சாதகமான பதிலை தமது அரசுகளுடன் கலந்து பேசிய பின்னர் அறிவிப்பதாகவும் பொதுநலவாய பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள பொதுநலவாய பிரதிநிதிகள் குழுவினர் செட்டிக்குளம் பகுதிக்கு விஜயம் செய்தபோதே இலங்கை அரசின் பணி தொடர்பாக தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். செட்டிக்குளம், மனிக்பாம் முகாம்களுக்கு விஜயம் செய்த பொதுநலவாய பிரதிநிதிகளுக்கு அரச அதிகாரிகள் படைத்தரப்பினர் மக்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள், நிவாரணங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

ஜெனரல் பொன்சேகாவை சந்தித்த ஐ.தே.கட்சி எம்.பி தயாசிறிக்கு பொன்சேகா தேநீர் வழங்கி உபசரிப்பு..!!

கொழும்பு வெலிக்கடைச் சிறையிலுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா இன்று தன்னைப் பார்வையிட வந்த ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு தேநீர்வழங்கி உபசரித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு சிறையில் மின்சார கேத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதால் அதன்மூலம் தேநீர் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

கனடாவுக்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல்களைத் தடுக்க நடவடிக்கை..!!

கனடாவுக்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் மற்றும் ஆட்கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் கனேடிய அரசாங்கம், குடிவரவுச் சட்டத்தை மாற்றியமைத்துள்ளது. சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைபவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்தச் சட்டமூலம் மாற்றப்பட்டிருப்பதாகக் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவ்ஸ் தெரிவித்தார். இந்த புதிய சட்டத்துக்கமைய சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைபவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் உட்பட அடிப்படை வசதிகள் குறைக்கப்படும். மேலும் அவர்களது நிரந்தர வதிவுரிமைக் கோரிக்கை நிராகரிக்கப்படலாமென்றும், அதுமட்டுமின்றி அவர்களின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவர்கள் 5 வருடங்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாதென்றும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக குடியேற்ற வாசிகளை கனடாவுக்குள் அழைத்துச் செல்பவர்களுக்கும் குறைந்தபட்சம் 10 வருடகாலச் சிறைத்தண்டனையும் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த கனேடிய அமைச்சர் விக்டோல்ஸ்; கடந்த வருடங்களில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் கனடா வருகை அதிகரித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் அகதிகளுக்கு கனடா வழங்கிவரும் சலுகையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகள்அதிகரித்துள்ளன. இதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் ஆட்கடத்தல் காரர்களுக்கும், சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஓகஸ்ட் மாதம் 492 இலங்கையர்கள் எம். வி. சன். ம. கப்பல் மூலம் சட்ட விரோதமாகக் கனடாவுக்குள் நுழைந்து, தமக்குப் புகலிடம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்தே, கனடா சட்ட விரோதக் குடியேற்ற வாசிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது. இதன் ஒரு அங்கமாக ஆட்கடத்தல்காரர்களுக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கும் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குடிவரவுச் சட்டம் நேற்று முன்தினம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் பாரியளவில் ஆதரவளிக்கும் நாடாகக் கனடா உள்ளது. ஆனால் இந்தச் சலுகையை யாரும் துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதிக்கப்படாது எனக் கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.

தெரணியகல காட்டுப் பகுதியில் இருந்து 446 தேசிய அடையாள அட்டைகள் மீட்பு..!!

கம்பஹா மாவட்டம் தெரணியகல நக்காவிட்ட பிரதேசத்தில் கற்குழி ஒன்றுக்குள் மக்கிப்போன நிலையிலிருந்த 446 தேசிய அடையாள அட்டைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுக்குத் தேன்சேகரிக்கச் சென்ற நபரொருவர் வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் அடையாள அட்டைகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அடையாள அட்டைகளில் 303அ. அட்டைகள் முற்றாக மக்கி விட்டன. அவற்றலிருந்து விவரங்களைப் பெறமுடியவில்லை. 86 அட்டைகளில் உரியவரின் பெயரும், முகவரியும், இலக்கமும் தெரிகின்றது. 57 அட்டைகளில் இலக்கங்கள் மட்டுமே தெரிகின்றன. இந்த அடையாள அட்டைகள் பொத்தெனிகந்த, நக்காவிட்ட, மாலிபொட, மியனவிட்ட மற்றும் யட்டிவல பிரதேசவாசிகளுக்குச் சொந்தமானவை. 1989 ம் ஆண்டு ஜே.வி.பியினரால் சேகரிக்கப்பட்டவை என்று தெரணியகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை - ஐஸ்..!!

இந்தியில் படுபிஸியாக இருந்த ஐஸ்வர்யா ராய் எந்திரனில் ரஜினிக்கு ஜோடியானார். இதுவரை அவரது திரைவாழ்க்கையில் அவர் காணாத வெற்றியை எந்திரன் தந்துள்ளது. இதுபற்றி அவர், "இதுபோன்ற வேடங்களை அடிக்கடி செய்ய முடியாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படி எனக்கு அரிதாகக் கிடைத்த வேடத்தை சிறப்பாகச் செய்ய முடிந்தது. ஷங்கருக்கு நன்றி. முன்பைவிட இப்போது அவரை நன்கு புரிந்து கொண்டேன். அவர் நினைத்ததை என்னால் திரையில் தர முடிந்தது" என்றார். மேலும், எந்திரனின் வெற்றி எனக்கு அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளதாக ஐஸ்வர்யா ராய். கூறுகிறார்.