பயனர்கள்.
ript>
வெள்ளி, 22 அக்டோபர், 2010
பேருவளை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போன மீனவர்களில் நால்வர் பலி..!!
களுத்துறை மாவட்டம் பேருவளை பிரதேசத்தில் இருந்து கடலுக்குச் சென்றநிலையில் காணாமல் போன மீனவர்களில் 4பேர் உயிரிழந்துள்ளனர். தினுஷா 2 என்ற ஆழ்கடல் மீன்பிடி படகில் 5 மீனவர்கள் கடந்த மார்ச்மாதம் 19ம் திகதி கடலுக்குச் சென்றனர். அவர்களில் 4 பேரை உயிரிழந்துள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மீன்பிடி படகு காணாமல்போனதாக கடந்த ஜூன் 16ஆம் திகதி தகவல்கள் கிடைத்தன. இதனடிப்படையில் அமைச்சும் மீன்பிடி திணைக்களமும் சில நாடுகளில் உள்ள இலங்கை தூதரக அலுவலகங்களுக்கு தகவலை தெரியப்படுத்தியிருந்தன. இந்த படகு நேற்றைய தினம் மாலைத்தீவு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்தாக மாலைதீவில் உள்ள இலங்கை அதிகாரிகள் மீன்பிடி அமைச்சு தெரியப்படுத்தியிருந்தனர். படகு மீட்கப்பட்டபோது, அதில் ஒரு மீனவர் மாத்திரம் உயிருடன் இருந்துள்ளார். ஏனைய மீனவர்களில் உடல்களை மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் கடலில் போட்டுள்ளதாக தெரியவருகிறது. உயிருடன் மீட்கப்பட்ட மீனவர் மாலைத்தீவு அதிகாரிகளினால் மாலே நகருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மீனவரையும் மீன்பிடி படகையும் விரைவில் இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி அமைச்சு கூறியுள்ளது.
காத்தான்குடியில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்..!!
மட்டக்களப்பு, காத்தன்குடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இவ்வாண்டு ஜனவரிமாதம் தொடக்கம் கடந்த செப்டம்பர்மாதம் வரைக்கும் 6 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மாவட்டத்திலிருந்து 104 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14பிரதேச செயலளார் பிரிவுகளிலிருந்தும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன் பாலியல் துஷ்பிரயோகம் உடலியல் ரீதியான சித்திரவதை, போசாக்கு வழங்காமை, மருத்துவ வசதிகள் செய்யப்படாமை, சிறுமி மீதான பாலியல் வன்புணர்வு போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
2000 சதுர கிலோமீற்றர் பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை-இராணுவப் பேச்சாளர்..!!
2000 சதுர கிலோமீற்றர் பரப்பில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை என இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார். இதுவரையில் 1800 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 314850 கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றப்பட்ட பிரதேசங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச மற்றும் உள்நாட்டு கண்ணி வெடி அகற்றும் குழுக்களுடன், இராணுவத்தினரும் இணைந்து கண்ணி வெடிகளை அகற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த மகளான 8வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்..!!
தனது சொந்த மகளான 8வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எஸ்.மானவடு தெரிவித்துள்ளார். 3ஆம் தரத்தில் கல்விபயிலும் 8வயது மகளையே தந்தை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திருப்பது குறிப்படத்தக்கது. இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சீக்கிரமே கவுண்டர் புறப்பட்டு வருவாரு..!!
தனது பாணி காமெடியை, பலர் காப்பி அடிப்பதால் இனி சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார் கவுண்டமணி. இதுபற்றி அவரது நண்பர்களிடம் கேட்டோம்! சினிமாங்கறதே காப்பியடிக்குறதுதானே. யார் வேணாலும் அண்ணன் காமெடியை காப்பி அடிச்சு பிழைச்சுக்கட்டும். அதுக்காக அவர் இனி நடிக்க மாட்டார்னு சொல்றதெல்லாம் பொய். அண்ணன் இப்போ ஓய்வுல இருக்காரு. இருந்தாலும் தினமும் 4 மணி நேரம் ஆபீசுக்கு வந்து கதை கேட்குறாரு. சீக்கிரமே கவுண்டர் புறப்பட்டு வருவாரு என்கிறார்கள் கவுண்டரின் நண்பர்கள்.
புலம்பெயர்ந்து தொழில்புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏற்பாடு..!!
வெளிநாடுகளில் தொழில் புரியும் பல்வேறு துறைசார்ந்தவர்களையும் இணையத்தினூடாக தொடர்பினை ஏற்படுத்தி புலம்பெயர்ந்து தொழில்புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு கடந்த 19ம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை வரலாற்றில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த தாம் தயாராகிவருவதாக தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களை இணையத்தினூடாக ஒன்றிணைத்துப் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலுள்ள தொழில் முகவர்கள் இலங்கைத் தூதரகங்கள், இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இத்திட்டத்தின்மூலம் இணைய வலையமைப்புக்குள் உள்ளடக்கப்படவுள்ளன. இந்த வலையமைப்பானது மேலும் விரிவாக்கப்பட்டு பொறுப்புக் கூறவேண்டிய சகல நிறுவனங்களுக்கும் இடையே தகவல் பரிமாற்ற முறை ஊடாக தகவல் வழங்கவும் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளிலுள்ள தொழில் வழங்குநர் தமக்குத் தேவையான தொழிலாளி பற்றி அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவரகம் இணைய வலையமைப்பினூடாக அந்நாட்டு இலங்கை தூதரகத்திற்கு அதுபற்றி அறிவிக்கும். பின்னர் இலங்கைத் தூதரகம் அதுதொடர்பாக ஆராய்ந்து தொழில் அனுமதியினைப் பெற்றுக்கொடுப்பதுடன், இது பற்றிய தகவலினை இணையத்தினூடாக இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவருக்கும், இலங்கை பணியகத்திற்கும் அனுப்பிவைக்கும். அத்துடன் குறித்த சேவை வழங்குநரின் வருமானம், அடையாள அட்டை இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் வேலைசெய்யும் வீட்டிலுள்ள குடும்பத்தின் தகவல்களையும் இணையமயப்படுத்தல் வேண்டும். இந்த முறைமூலம் தற்போது இடைத்தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தவிர்க்க முடியுமெனவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் சேவகர்களாக அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மாற வேண்டும்-ஜனாதிபதி..!!
பொருளாதார அபிவிருத்திக்கான இலக்கை வெற்றிகொள்வதற்கு மக்களின் சேவகர்களாக அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மாறுவதுடன் அதற்கான சிந்தனை மாற்றம் அவர்களிடம் பிறக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக ரீதியான மாற்றமொன்றிற் காக சகல தரப்பினரதும் அர்ப்பணிப்பு அவசிய மெனத் தெரிவித்த ஜனாதிபதி; ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அது உறுதுணையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தியுடன் உயர் பண்புள்ள சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே சிறந்த மனப்பான்மையை விருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தியுடன் சமூக அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பிரதமர் டி.எம். ஜயரட்ன, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, பிரதமர் டி.எம். ஜயரட்ன பிரதமர் செயலகத்தினூடாக ஆரம்பித்துள்ள சிந்தனை மாற்றத்திற்கான இவ்வேலைத் திட்டத்தை பாராட்டுவதுடன் நாடளாவிய ரீதியில் இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான தலைமைத்துவத்தையும் அவரே வழங்குவதும் சிறப்பம்சமாகும். கொழும்பு நகரில் குப்பை கூளங்களை அழிக்க முடியுமா என்ற பிரச்சினைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்ற சிந்தனை மாற்றத்தின் காரணமாக மக்கள் தற்போது வீதிகளில் குப்பை கூளங்களை போடுவதில்லை. அவர்கள் தற்போது பழக்கப்பட்டு விட்டனர். நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டங்களை மதிக்காது செயற்பட இடமளிக்க முடியாது. சட்டம் சகலருக்கும் சமமானது. அதற்கான மதிப்பினை சகலரும் வழங்க வேண்டும். சமூக சிந்தனை மாற்றமொன்றை எம்மால் மேற்கொள்ள முடியும். முன்னர் அரச அதிகாரிகள் மக்களுக்கு அனுப்பும் கடிதத்தில் தம்மை மக்கள் சேவகராகவே இனங்காட்டி வந்தனர். இன்று அமைச்சர்களிடையோ அதிகாரிகளிடையோ அப்பழக்கம் இல்லாது அருகிவிட்டது. 12 லட்சம் அரச ஊழியர்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட்டால் நாடு முன்னேறும். தற்போது முழுநாட்டிலும் அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக்க எம்மால் முடிந்துள்ளது. அதனை மேலும் இரண்டு மடங்குகளாக் குவதே எமது இலக்கு. சமூக ரீதியான மாற்றம் தேவை. அதற்கு சகலரதும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியம். குடும்பம், பாடசாலை மட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாவலி மக்கள் எதிர்நோக்கியுள்ள காணி உறுதிப்பத்திர பிரச்சினையைத் தீர்த்து வைக்க ஒரு லட்சம் காணி உறுதி..!!
மகாவலி பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கியுள்ள காணி உறுதிப்பத்திர பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஒரு லட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்ற த்தில் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ் இற்றை வரையும் 40ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் காரணமாக இருப்பிடத்தையும், விவசாய பூமியையும் இழக்கும் சகலருக்கும் மாற்று இருப்பிடங்களும், விவசாய நிலமும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மகாவலி பிரதேசங்களில் குடியிருக்கும் மக்கள் காணி உறுதிப்பத்திரங்கள் தொடர்பாகப் பெரும் பிரச்சினைக்கு நீண்டகாலமாக முகம் கொடுத்து வந்தார்கள். இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் மகாவலி பிரதேசத்தில் வாழ்பவர்களுக்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன் இத்திட்டத்தின்கீழ் இற்றைவரையும் 40ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. காணி அமைச்சின் பிம்சவிய திட்டத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன். காணி உறுதி வழங்கும் நடவடிக்கை தாமதமடைவதற்கு நில அளவையாளர்கள் பற்றாக்குறையே பிரதான காரணமாகும். இப்பிரச்சினையை துரித கதியில் தீர்த்து வைக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதேநேரம், மகாவலி பிரதேசங்களில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளவர்களை வெளியேற்றவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. மொரகஹகந்த நீரப்பாசனத் திட்டத்தின்கீழ் 88ஆயிரம் ஹெக்டேயர் நிலம் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. இது பராக்கிரம சமுத்திரத்தை விடவும் நான்கு மடங்கு பெரிய அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டம் காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ள 1581 குடும்பங்களை மீளக்குடியமர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்திட்டம் காரணமாக இருப்பிடத்தையும், விவசாய நிலத்தையும் இழப்பவர்களுக்கு மாற்று இடத்தில் இருப்பிடமும், விவசாய நிலமும் வழங்கப்படும். மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் மக்களுக்கும், வனஜீவராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு குவைத் நிதியமும், ஜய்க்கா நிறுவனமும் நிதியுதவி வழங்குகின்றன. உலக உணவுத் தேவையைக் கருத்திற் கொண்டு 1970 களில் மகாவலி அதிகார சபை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது நாட்டில் 9லட்சம் ஹெக்டயர் நிலத்தில் விவசாயத்தை மேம்படுத்துவது இலக்காகக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் நாம் இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். இத்திட்டத்திற்குள் புதிய ஆறுகளையும், குளங்களையும் உள்ளடக்கியுள்ளோம். மகாவலி பிரதேசத்தில் மரக்கறி பயிர்ச்செய்கையும், பழச் செய்கையும், அலங்கார மீன் வளர்ப்பும் ஊக்குவிக்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
படகில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகளை இந்தோனேசிய பொலீசார் தடுத்து மீட்டுள்ளனர்..!!
படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த 85 புகலிடக் கோரிக்கையாளர்களை இந்தோனேசியத் துறைமுகப் பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக பனாயிட்டான் தீவில் இடைநடுவில் நின்ற போது துறைமுகப் பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 15 பெண்களும், 18 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பல குழந்தைகள் சுகயீனமுற்றிருந்ததாகவும், பலர் பல நாட்கள் ஒழுங்கான உணவின்றி தவித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் படகில் சென்றவர்களில் ஒரு பெண் மற்றும் ஆண் உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர். மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்தோனேசியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது இவர்கள் ஜகார்த்தாவிலுள்ள இந்தோனேசிய குடிவரவு தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சிம்புவுடன் நடிக்க தமன்னா மறுப்பு..!!
‘வேட்டை மன்னன்’ படத்தில் சிம்புவுடன் நடிக்க தமன்னாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. பிறகு தமன்னா சிம்புவுடன் நடிக்க முடியாது எனக் கூறினார் என செய்திகள் வெளியாகின. ஆனால் தமன்னா இதை மறுத்துள்ளார். சிம்பு கேட்கும் தேதி என்னிடம் இல்லை. அதனால்தான் நடிக்கவில்லை. நல்ல கேரக்டரும், கால்ஷீட்டும் அமையும்போது நிச்சயம் சிம்புவுடன் நடிப்பேன் என்கிறார் தமன்னா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)