பயனர்கள்.

ript>

வெள்ளி, 22 அக்டோபர், 2010

புலம்பெயர்ந்து தொழில்புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏற்பாடு..!!

வெளிநாடுகளில் தொழில் புரியும் பல்வேறு துறைசார்ந்தவர்களையும் இணையத்தினூடாக தொடர்பினை ஏற்படுத்தி புலம்பெயர்ந்து தொழில்புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு கடந்த 19ம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை வரலாற்றில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த தாம் தயாராகிவருவதாக தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களை இணையத்தினூடாக ஒன்றிணைத்துப் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலுள்ள தொழில் முகவர்கள் இலங்கைத் தூதரகங்கள், இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இத்திட்டத்தின்மூலம் இணைய வலையமைப்புக்குள் உள்ளடக்கப்படவுள்ளன. இந்த வலையமைப்பானது மேலும் விரிவாக்கப்பட்டு பொறுப்புக் கூறவேண்டிய சகல நிறுவனங்களுக்கும் இடையே தகவல் பரிமாற்ற முறை ஊடாக தகவல் வழங்கவும் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளிலுள்ள தொழில் வழங்குநர் தமக்குத் தேவையான தொழிலாளி பற்றி அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவரகம் இணைய வலையமைப்பினூடாக அந்நாட்டு இலங்கை தூதரகத்திற்கு அதுபற்றி அறிவிக்கும். பின்னர் இலங்கைத் தூதரகம் அதுதொடர்பாக ஆராய்ந்து தொழில் அனுமதியினைப் பெற்றுக்கொடுப்பதுடன், இது பற்றிய தகவலினை இணையத்தினூடாக இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவருக்கும், இலங்கை பணியகத்திற்கும் அனுப்பிவைக்கும். அத்துடன் குறித்த சேவை வழங்குநரின் வருமானம், அடையாள அட்டை இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் வேலைசெய்யும் வீட்டிலுள்ள குடும்பத்தின் தகவல்களையும் இணையமயப்படுத்தல் வேண்டும். இந்த முறைமூலம் தற்போது இடைத்தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தவிர்க்க முடியுமெனவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக