பயனர்கள்.
ript>
திங்கள், 4 அக்டோபர், 2010
இடிமின்னல் தாக்கியதில் ஐந்து பேர் உயிரிழப்பு..!!
இடி மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலையினால் பலர் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இடிமின்னல் தாக்கியதில் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதடன், மழை வெள்ளத்தினால் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மொனராகலை, குருணாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மின்னல் தாக்கி ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றப் பேரவையின் பணிகள் இந்த வாரத்தில் ஆரம்பமாகும்..!!
பாராளுமன்றப் பேரவையின் பணிகள் இந்த வாரத்தில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் டி.எம். ஜயரட்ன ஆகியோர் பரிந்துரை செய்த பிரதிநிதிகள் தொடர்பான தகவல்களை சபாநாயகர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். இதன்படி, இன்னும் ஒரு சில தினங்களில் பாராளுமன்றப் பேரவையை ஜனாதிபதி அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வரை பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளமன்ற உறுப்பினர் எம்.சுவாமிநாதனை ரணில் விக்ரமசிங்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.
நல்ல கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறேன் என்று கூறினார் நடிகை தமன்னா..!!
நல்ல கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கிறேன் என்று நடிகை தமன்னா கூறினார். கேடி, கல்லூரி, அயன், கண்டேன் காதலை, சுறா, படிக்காதவன் என ஏராளமான படங்களில் நடித்தவர் தமன்னா.பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதால் இவருக்கு கைவசம் இப்போது ஏராளமான படங்கள். ஆனாலும் தமன்னா தடுமாறவில்லை. நிதானமாக கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் கூறியதாவது: எத்தனை படங்கள் கையில் இருக்கின்றன என்பது குறித்து நான் கவலைப்படுவதே இல்லை. என்ன ரோல்கள் கிடைக்கின்றன என்பதை மட்டுமே பார்க்கிறேன். நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன். கல்லூரி படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது. அதைப் போன்ற கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோன்ற ரோல்களிலேயே அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன். கல்லூரி படம் போன்ற கதை கிடைத்தால் சம்பளம் பற்றிக் கூட நான் கவலைப்பட மாட்டேன். இவ்வாறு தமன்னா கூறினார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிசாருக்கு அறிவுறுத்தல்கள்..!!
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிசார் மாகாணசபை உறுப்பினர்களுடன் மாவட்டத்திற்கு வெளியே செல்வது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளினால் சில புதிய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த அறிவுறுத்தல்களின்படி மாகாண சபை உறுப்பினரொருவர் வெளிமாவட்டத்திற்கு செல்வதென்றால் அவரது பாதுகாப்பு கடமையிலுள்ள பொலிசார் 3நாட்களுக்கு முன்பு அவர் கடமையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து அனுமதியை பெறவேண்டும். மாவட்டத்திற்கு வெளியே செல்வதென்றால் ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு செல்லவேண்டும் என்று தமது பாதுகாப்பிற்குரிய பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இது தொடர்பாக மாகாணசபை உறுப்பினர்களுக்கு எவ்வித அறிவித்தல்களும் உரிய பொலிஸ் நிலையங்களிலிருந்து கிடைக்கவில்லை. எமது பாதுகாப்பு கடமைகளிலுள்ள பொலிசார் ஊடாகவே இதனை நாம் அறிந்து கொண்டோம். செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபையின் அமர்வு நடைபெறும்போது எமது பாதுகாப்பு தொடர்பாக எதிர்நோக்கும் இப்பிரச்சினை குறித்து சபையில் விவாதிக்கப் போகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த புதிய நடைமுறைக்கு தனது ஆட்சேபனையை எழுத்து மூலம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தான் அறிவித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினரான மாசிலாமணி தெரிவித்துள்ளார். ஆயுதம் இல்லாத பொலிஸ் பாதுகாப்பு தேவையற்றது என்பதால் இன்று தான் பொலிஸ் பாதுகாப்பின்றியே மாவட்டத்திற்கு வெளியே கொழும்பிற்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட கூட்டத்திற்கு இடையூறு..!!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட கூட்டத்திற்கு நேற்று கட்சியின் உறுப்பினர்களினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளனர். காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் கூட்டத்திற்கு இடையூறு விளைவித்துள்ளனர். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உரையாற்ற முற்பட்டபோது கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தமது கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் அளிக்குமாறு சில உறுப்பினர்கள் கோரிய போதிலும் அதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. இதனால் அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டது. குழப்ப நிலைமை காரணமாக கூட்டம் இடைநடுவில் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்-மங்கள..!!
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறைந்த பட்சம் 20 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் இவ்வாறு மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இணைந்து கொண்ட அனைவரும் செயற்பாட்டு உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுக்காலை மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் குறித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர். 18வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக சுவரொட்டியை அச்சிட்டமை தொடர்பில் மங்கள சமரவீரவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கில் அதிகளவான சிறுவர் சிறுமியர் அநாதவரான நிலையில் காணப்பட்டிது..!!
வடக்கில் அதிகளவான சிறுவர் சிறுமியர் அநாதவரான நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது. யுத்த காலத்தில் இவ்வாறு அதிகளவான சிறுவர் சிறுமியர் அநாதரவாக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. பெருமளவிலான சிறுவர் சிறுமியர் மிகவும் அத்தியாவசியமான பெற்றோர் அரவணைப்பை இழந்துள்ளதாக வடக்கு மாகாண சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. 514 சிறுவர் சிறுமியர் யுத்தகாலத்தில் தாய் தந்தையை இழந்துள்ளதாகவும், 612 சிறுவர் சிறுமியர் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இப்புள்ளி விபரத் தகவல்களின் துல்லியத்தன்மை மாறுபடலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வவுனியா மாவட்டத்தில் ஏழு சிறுவர் பராமரிப்பு நிலையங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 28 சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் பதிவுசெய்யப்படாதவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அநாதரவான சிறுவர் சிறுமியரின் நலனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எந்திரனுக்காக அக் 22 வரை புதுப்பட ரிலீஸ் நிறுத்தி வைப்பு..!!
எந்திரன் ரிலீஸ் காரணமாக வரும் அக்டோபர் 22-ம் தேதிக்குப் பிறகுதான் புதிய படங்களை வெளியிடுவது என தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளனர். உலகமெங்கும் கடந்த 1-ம் தேதி வெளியான எந்திரன் திரைப்படம் பெரிய அளவில் வசூலைக் குவித்து வருகிறது. இதனால் திரைப்பட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு கூறுகையில், "ரஜினியைத் தவிர யாரையும் நம்பி இத்தனை கோடியை விநியோகஸ்தர்களான எங்களால் போடவும் முடியாது. மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. எனவே அடுத்த மூன்று - நான்கு வாரங்களுக்கு வேறு புதிய படங்களை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். அனைத்து தயாரிப்பாளர்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்..." என்றார். அபிராமி ராமநாதன் கூறுகையில், "இந்த ஆண்டு மொத்தமே 3 படங்கள்தான் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு ஓடின. ஆனால் அந்த குறைகளையெல்லாம் போக்கி, இந்தத் தொழிலை மீண்டும் நிமிர வைத்துள்ளது ரஜினியின் எந்திரன் என்றால் மிகையல்ல. அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் புத்துணர்ச்சி பெற்றுள்ளனர் " என்றார்.
மட்டக்களப்பு பொலிஸ் அணியினரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு..!!
கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 76வது பொலிஸ் விளையாட்டுப் போட்டியில் கயிறுழுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு பொலிஸ் அணியினரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று பகல் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரி.என்.விஜய குணவர்த்தனா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கௌரவித்தார். மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கொல்லுரேயும் கலந்து கொண்டார். இவ் வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். பொலிஸ் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கிடையிலான விளையாட்டு;ப்போட்டியில் கயிறிழுத்தல் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்ற மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றியீட்டிய மட்டக்களப்பு பொலிஸ்நிலைய வீரர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. கடந்த மாதம் 23,24,25 திகதிகளில் பொலிஸ்திணைக்கள பம்பலபிட்டி பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி இடம் பெற்றது. கயிறிழுத்தல் போட்டியில் இறுதிப்போட்டிக்கு மட்டக்களப்பு பொலிஸ் அணியினரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அணியினரும் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு அணி வெற்றி பெற்றுள்ளது. 44 பொலிஸ் குழுக்கள் பங்குகொண்ட போட்டியின் இறுதி நிகழ்வு பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரியா தலைமையில் இடம்பெற்றபோது தங்க பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்ட இவ்வணியினரையே கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் நவம்பர் இறுதிக்கு முன்னதாக 6540 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்..!!
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நவம்பர் இறுதிக்கு முன்னதாக 6540 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சு கட்டங் கட்டமாக முன்னெடுத்து வருகின்றதென அமைச்சின் செயலாளர் சுனில் எச்.சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டிடன் அனைத்து பகுதிகளிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலேயே கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நவம்பர் மாத இறுதிக்குள் இந்நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார். இதனடிப்படையில், எதிர்வரும் 06ம் திகதி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் கல்வியியற் கல்லூரியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மூவாயிரம் மாணவர்களுக்கும் ஆங்கிலப் பட்டதாரிகள் 540 பேருக்கும் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இலங்கைத் தமிழ் அகதிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு முனைப்பு..!!
தமிழகத்தில் சரணடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு முனைப்பு காட்டி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்வதற்கு இலங்கை அகதிகள் எத்தனிப்பதாகவும், இவ்வாறான முனைப்புக்களை கைவிடுமாறும் தமிழக அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முகாம்களிலிருந்து தப்பித்து சட்டவிரோதமான முறையில் மேற்குலக நாடுகளுக்குச் செல்ல தமிழ் அகதிகள் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அகதிகள் தொடர்பான தமிழக அரசாங்கத்தின் உயர் அதிகாரி கலைவண்ணன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அகதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றாலும் இந்திய அரசாங்கத்திடம் அறிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விசேட கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, புறக்கோட்டை, மூன்றாம் குறுக்குத் தெருவிலுள்ள நான்கு மாடியில் தீவிபத்து..!!
கொழும்பு, புறக்கோட்டை, மூன்றாம் குறுக்குத் தெருவிலுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட வர்த்தகக் கட்டடத் தொகுதியின்கீழ் மாடியிலிருக்கும் கடையொன்றில் நேற்று பிற்பகல் தீவிபத்து ஏற்பட்டதாக கொழும்பு தீயணைக்கும் படையினர் தெரிவித்தனர். இத்தீ விபத்து ஏனைய பிரதேசங்களுக்குப் பரவாது முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணியில் இருபது தீயணைப்புப் படைவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தெற்காசியாவில் புலிகள்மூலம் தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களைத் தோற்றுவித்தது இந்தியாவே-பாகிஸ்தான் குற்றஞ்சாட்டு..!!
தெற்காசியாவில் புலிகள்மூலம் தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களைத் தோற்றுவித்தது இந்தியாவே என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் தூதுக்குழுவைச் சேர்ந்த அம்ஜாட் ஹ_சைன் சியால் அயல்நாடுகளில் பயங்கரவாத சக்திகளுக்கு இந்தியா ஆதரவளித்ததாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அத்துடன், மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழ்ப் புலிகளுக்கும் இந்தியாவே உதவியதாக அவர் சாடியுள்ளார். தெற்காசிய பிராந்தியத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குல்களை தமிழ்ப் புலிகளே அறிமுகப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துடன் பாகிஸ்தானைத் தொடர்புபடுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சியால் ஐ.நா.வின் 192 உறுப்பு நாடுகளில் இந்தியாவே காஷ்மீரில் அரச பயங்கரவாதத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். புதுடில்லியின் அடக்கு முறைக்கு எதிராகவே காஷ்மீர் மக்கள் கிளர்ச்சியில் தஞ்சமடைந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தியாவானது மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பை உருவாக்கிப் போஷித்தது. அந்த அமைப்பானது எமது பிராந்தியத்தில் தற்கொலைத் குண்டுத்தாக்குதலை அறிமுகப்படுத்தியது என்று அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பிராந்தியமானது இந்தியாவின் ஓர் அங்கமென கிருஷ்ணா உரிமை கோரியிருப்பது குறித்துத் தெரிவித்த சியால் சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியானது ஐ.நா.வின் நிகழ்ச்சி நிரலில் இருந்ததாகவும் அது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரானது இந்தியாவினதோ அல்லது பாகிஸ்தானதோ சொத்து அல்ல என்றும் அது காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது என்று இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதியளித்திருந்தார். அதனைப் பாகிஸ்தான் வரவேற்றிருந்தது. இந்தியா தனது கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான்மீது குற்றஞ்சாட்டுகிறது. தனது சொந்த செயற்பாட்டை மறைத்துவைப்பதற்காக பாகிஸ்தான்மீது குற்றஞ்சாட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். இந்தியப் பாதுகாப்புப் படைகளினால் காஷ்மீர் மக்கள் மோசமான வடிவத்திலான மனித உரிமை மீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் பல தசாப்தமாக உட்பட்டுள்ளனர். சுயநிர்ணய உரிமையைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, பாகிஸ்தான் தவறான குற்றச்சாட்டுகளைத் தனது நாடு குறித்து தெரிவிப்பதாக இந்தியத் தூதுக்குழுவின் மனிஷ் குப்தா சாடியுள்ளார். பயங்கரவாதப் பிரச்சினை குறித்து மட்டுமே பாகிஸ்தான் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதனை இல்லாமல் செய்வது குறித்து கவனத்தைத் திருப்ப வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகத்தின் உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும் இலங்கைக்கு விஜயம்..!!
உலகத்தின் உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும் நேற்று முன்தினம் இரவு அவசரமாக இலங்கை வந்திருந்தனர். மலேஷியாவின் சுதந்திரதின நிகழ்வுகளில் விசேட விருத்தினர்களாக பங்குபற்றிய பின்னர் தமது சொந்த நாட்டுக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் இலங்கை வந்திருந்தனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர். உலகில் உயரமான மனிதரான ஹக் நவாஸ் 7 அடி 8 அங்குலம் உயரமானவர். அவருக்கு 2 சகோதரர்களும் இரு சகோதரிகளும் உள்ளனர். இவரது சகோதர சகோதரிகள் அனைவரும் சாதாரண உயரமுடையவர்கள். பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பஹபூரை வசிப்பிடமாகக் கொண்ட இவர், காலை உணவாக 16 ரொட்டிகள் 12 முட்டைகள் 4 லீட்டர் பாலையும் பகல் மற்றும் இரவு உணவாக 15 ரொட்டிகள் 3 கிலோ, மாட்டி றைச்சி அல்லது கோழி இறைச்சியையும் உண்பதாக கூறுகிறார். அத்துடன் மணித்தியாலத்துக்கு ஒருமுறை முன்பு பசியெடுப்பதன் காரணமாக சிற்றுண்டிகளை உண்பதாகவும் கூறுகிறார். 24 வயதுடைய பிரமச்சாரியான இவர், 6அடிக்கு மேற்பட்ட எந்தவொரு நாட்டையும் சேர்ந்த யுவதியை திருமணம் செய்ய விரும்புவதாக கூறுகிறார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பேச விரும்புவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அதேவேளை உலகின் குள்ளமான மனிதரான அலி சமானின் உயரம் வெறுமனே 39 அங்குலம் மாத்திரமே (3 அடி 3 அங்குலம்). 48 வயதான இவர் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர். இவரது மனைவியின் உயரம் 5 அடியாகும். இவருக்கு 16, 11 மற்றும் 6 வயதுடைய மூன்று மகள்மார் உள்ளனர். மூத்த மகளின் உயரம் 34 அங்குலம் ஆகும். பாகிஸ்தானிய தொலைக்காட்சியில் நடிகராகவும் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவராகவும் இவர் பணி புரிகிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)