பயனர்கள்.

ript>

புதன், 6 அக்டோபர், 2010

மாமரத்தில் மாங்காயாக அதிசயப் பிள்ளையார்..!!

மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அதிசய விநாயகர் ஆலயத்தின் வளாகத்தில் உள்ள மாமரத்தில் பிள்ளையார் உருவத்தினை கொண்ட அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. மேற்படி ஆலயத்தின் புனர்நிர்மானப் பணிகள் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் இவ்வாறான அதிசயப் பிள்ளையாரின் தோற்றம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இதனை பெருந்திரளான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டு வருவதுடன், மாங்காய் உருவத்தில் தோன்றியுள்ள அதிசயப் பிள்ளையாரின் இயற்கையான இந்த வடிவம் பிள்ளையாரின் அருள் கடாட்சம் இந்த இடத்தில் நேரடியாக கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

நடன நிகழ்ச்சியில் பிரபுதேவா - நயன்..!!

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியானது அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக பிரபுதேவா மற்றும் நயன்தாரா கலந்துகொள்கின்றனர்.  நடன இயக்குனர் கலா இயக்கும் இந்த ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியானது நான்கு சீசன்கள் முடிந்து தற்பொழுது ஐந்தாவது சீசனின் இறுதிப் போட்டியும் நடத்தப்படவிருக்கிறது. இந்தப் போட்டியானது அபுதாபி நேஷனல் தியேட்டரில் அக்டோபர் 15ம் தேதி நடைபெறுகிறது.  மாலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் சீசன் 5ன் நீதிபதிகளான குஷ்பு, நமீதா, நடன இயக்குனர் பிருந்தா, நிகழ்ச்சி இயக்குநர் கலா மாஸ்டர், தொகுப்பாளர்கள் சஞ்சீவ், கீர்த்தி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக நயன்தாராவும், பிரபுதேவாவும் பங்கேற்கின்றனர்.  இந்நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுக்கள் அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி சீட்டின் கட்டணமாக 30 திர்ஹாம் முதல் 150 திர்ஹாம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி முதல் டிக்கெட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

புலிகளை கால வரையறையின்றி தடுத்து வைக்கும் உத்தேசம் கிடையாது-அமைச்சர் டியூ.குணசேகர..!!

புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களைக்கூட கால வரையறையின்றி தடுத்து வைக்கும் உத்தேசம் கிடையாது என சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். 1971ம் ஆண்டு மற்றும் 1987-1990ம் ஆண்டுகளில் ஜே.வி.பி கிளர்ச்சியின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்பட்டனர். புலி உறுப்பினர்களுக்கு எதிராக துரித கதியில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலீஸ் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் சுமார் 02ஆயிரம் புலி சந்தேகநபர்களை விடுதலை செய்ய முடியும்.

பிரபாகரனின் வீட்டைப் பார்வையிடவரும் தென்னிலங்கை மக்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்வதாக தகவல்..!!

யாழ். வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டைப் பார்வையிடவரும் தென்னிலங்கை மக்கள் அங்கிருந்து மண்ணை எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் யாழ்ப்பாணத்துக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிரபாகரனின் இல்லத்தைச் சென்று பார்வையிடுகிறார்கள். உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் அந்த வீட்டைப் பார்வையிடும் அவர்கள் அங்கிருந்து மண் எடுத்துச் செல்கின்றனர். இதனை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கே.மயிலேறும்பெருமாள் உறுதிப்படுத்தியுள்ளார். பிரபாகரனின் வீட்டைப் பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என அங்கு முகாமிட்டிருக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.

புத்தர் சிலையை திருடிய பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவருக்கு 400,000 ரூபா அபராதம்..!!

புத்தர் சிலையை திருடிய பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவருக்கு 400,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காலி சிறீ பரமானந்த விஹாரையில் காணப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட புத்தர் சிலையொன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு வருடகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தலா 100,000ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், சிலையை உருக்குலைத்த இருவருக்கு தலா 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் வெற்றி நடைபோட்டுவரும் எந்திரன்..!!

உலகமெங்கும் வெற்றி நடைபோட்டுவரும் எந்திரன், பாலிவுட்டையும் பரவசப்படுத்தியுள்ளது. மும்பையில் நடைபெற்ற “ரோபோ பிரிமியர் ஷோவிற்கு பாலிவுட் திரையுலகமே திரண்டு வந்திருந்தனர். ஷங்கர் இதில் கலந்துகொண்டார். ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் வந்திருந்தார். வராமலிருந்த ஒரே பிரபலம் ஷாரூக்கான்தான். பாலிவுட்டில் இத்தனை பிரபலங்களும் சமீபத்தில் ஒன்றுதிரண்டு பார்க்க வந்த ஒரே படம் ரஜினியின் ரோபோதான் என தெரிவித்துள்ளது பாலிவுட் ஹங்காமா. ஜூகு பிவிஆர் திரையரங்கில் இந்த பிரத்யேக காட்சி இரவு 9.30 தொடங்கியது.
சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யாராய் பச்சன் ஆகியோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். தேவ் ஆனந்த், அமீர்கான், தர்மேந்திரா, ஹேமமாலினி, தபு, ஊர்மிளா, ஸ்ரேயா, சன்னி தியோல், ரமேஷ் சிப்பி, கிரண்கெர், இயக்குனர் சுபாஷ் கய், ராஜ்குமார், பிரேம் சந்தோஷி, கரண் ஜோஹர், பிரேம் சோப்ரா உட்பட பாலிவுட் திரையுலகமே ஆவலுடன் வந்திருந்தது ரோபோ திரைவிழாவிற்கு. ரோபோ பற்றி அமிதாப் “ரஜினி என்னும் அற்புதக் கலைஞருக்காகவும், இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பாக உருவாகியிருக்கும் ரோபோ படத்திற்காகவும் பாலிவுட் திரையுலகமே இங்கு வந்திருக்கிறது. ரஜினி, ஷங்கர் இருவரின் கடின உழைப்பு ரோபோவில் தெரிகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் என்றார்.
ஆமிர்கான் கூறும்போது, “இந்திய சினிமாவில் இப்படியும் படம் பண்ணலாமா என்று என்னை பிரமிக்க வைத்து விட்டது ரோபோ என்றார். வினோத் கன்னா கூறுகையில், “இந்திய திரையுலகத்தை ரோபோ படத்தின் மூலம் ஹாலிவுட் தரத்துக்கு தயாரிப்பாளர் கொண்டு சென்றுள்ளார். மிக அற்புதமான படம் என்றார். இயக்குனர் சுபாஷ் கய் கூறுகையில் “ரஜினிக்கு இணை ரஜினிதான், மிரட்டி விட்டார் ரோபோ என்றார். தேவ் ஆனந்த் பேசுகையில், “இந்திய சினிமாவின் பெருமை ரஜினி, ஹாலிவுட்டுக்கு இணையாக ரோபோ அமைந்துள்ளது எற்று பாராட்டினார். ஹேமமாலினி “ரஜினி நல்ல மனிதர், எனது சிறந்த நண்பரும்கூட. தமிழில் கமல், ரஜினி இருவரின் படங்களை விரும்பி பார்பேன். ரோபோவில் ரஜினி சூப்பர். அவரோட ஸ்டைலும், நடிப்பும் பார்க்கும் போது பிரமிப்பா இருந்தது என்றார். ஊர்மிளா கூறுகையில், இந்தியன் படத்தின்போது ஷங்கரின் திறமை, உழைப்பை நேரில் பார்த்திருக்கிறேன். ரோபோ படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்திருக்கிறார் ஷங்கர். ரஜினியின் ஸ்டைலில் அசந்துபோயிட்டேன். ரஜினி ரியலி சூப்பர் ஸ்டார் என்றார்.

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் இடம் பெற்றுள்ள கிராமங்களில் முஸ்லிம் திணைக்களத்தின் நடமாடும் சேவையொன்றை நடாத்த ஏற்பாடு..!!

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் இடம் பெற்றுள்ள கிராமங்களில் முஸ்லிம் திணைக்களத்தின் நடமாடும் சேவையொன்றை எதிர்வரும் சில வாரங்களுக்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளபடவுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹ_னைஸ் பாருக் தெரிவித்தார். மன்னார் முசலி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள 22 கிராம அதிகாரி பிரிவில் தற்போது முஸ்லிம்கள் மீள்குடியேறிவருகின்றனர். அவர்களது மதக்கடமைகளுக்காக பள்ளிவாசல்கள் இன்றியமையாதது என்று தெரிவித்த அவர் இப்பள்ளிவாசல்களை முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்வதுடன், ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது குறித்தும் இந்த நடமாடும் சேவை பயனளிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கல்ப் எயார் விமானசேவை மீண்டும் ஆரம்பம்..!!

பயங்கரவாத அச்சம் காரணமாக நீண்டநாள் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்ப் எயார் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்டநாள் இடைநிறுத்தப்பட்டிருந்த கல்ப் எயார் விமான சேவையின் யு320 விமானம், 150 பயணிகளுடன் நேற்றிரவு 8.20மணியளவில் பஹ்ரேனிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் முன்று நாட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உல்லாசப் பிரயாணத்துறையை மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை..!!

இலங்கையில் உல்லாசப் பிரயாணத்துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் உலக உல்லாசப் பிரயாண அமைப்பின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உலக உல்லாசப் பிரயாண அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி தாலிப் ரிபாயுடன் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மலேசியாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உலக உல்லாசப்பயண மாநாடு மலேசியாவில் இம்மாம் 4ஆம் திகதி முதல் இன்று 6ஆம் திகதி வரையில் நடைபெறுகின்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து உயர்மட்டத் தூதுக்குழுவொன்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் மலேசியா சென்றுள்ளது.

தனுஷ்க்கு மாமாவாக - விவேக்..!!

மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ், ஜெனிலியா, விவேக் நடித்த ‘உத்தமபுத்திரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் மகேந்திரன், கே.எஸ். ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஆர்.பி. சவுத்ரி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தனுஷ் பேசியதாவது: “உத்தமபுத்திரன் படம் சிறப்பாக வந்துள்ளது. இதில் விவேக்கை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். இது தெலுங்கில் ஹிட்டான “ரெடி” படத்தின் ரீமேக். அந்த படத்தை பார்த்ததுமே குறிப்பிட்ட கேரக்டருக்கு விவேக்தான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன்.  அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இடைவேளைக்கு பிறகு விவேக்தான் படத்தை தோளில் தாங்குவார். அந்த அளவு முக்கியமான கேரக்டராக அமைந்துள்ளது என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி பணிகளுக்கென சர்வதேச உதவி நிறுவனங்கள் 15319 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு அபிவிருத்தி பணிகளுக்கென சர்வதேச உதவி நிறுவனங்கள் 15319 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார். இந்நிதியின் மூலம் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 676 அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்;டு வருகின்றன. இத்திட்டங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் 8946 மில்லியன் செலவில் சுமார் 60 சதவீத அபிவிருத்திப்பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி, உகல வங்கி என்பனவற்றினூடாகவே இந் நிதியொதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன. நெக்டெப், நெகோர்ட், ஜெய்கா, ஜெபிக், ஏஎப்டி, நியாப், நேர்ப்,ஆகிய நிறுவனங்களுடாக அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இவ்வாரம் மட்டக்களப்புக்கு விஜயம்..!!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இவ்வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் 8ம் திகதி விஜயம் செய்யும் இக்குழுவினர் 9ம், 10ம், 11ம் திகதிகளில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர். 9ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணிவரை மாவட்ட செயலகத்திலும் 10ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் 12 மணி வரை ஓட்ட மாவடி பிரதேச செயலகத்திலும் 11ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் 11.30 மணிவரை செங்கலடி பிரதேச செயலகத்திலும் பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திலும் சாட்சியங்களை பதிவு செய்வர். காத்தான்குடி, பாசிக்குடா மற்றும் மீள்குடியேற்றப் பகுதிகள், அபிவிருத்தி நடைபெறும் இடங்களுக்கும் குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.

ஜெனரல் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் 156 இராணுவ அதிகாரிகளுக்கும், 5088 இராணுவ வீரர்களுக்கும் தண்டனை..!!

ஜெனரல் சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் 156 இராணுவ அதிகாரிகளுக்கும், 5088 இராணுவ வீரர்களுக்கும் இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகளை பெற்றுக்கொடுத்துள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா தளபதியாக இருந்தபோது இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தீர்ப்புகளுக்கு முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அப்போதும் கையொப்பமிட்டு அனுமதியை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா தளபதியாக இருந்த காலத்தில் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய உட்பட மேஜர் ஜெனரல் தரங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தின் மூலம் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக தண்டனைகள் விதிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் நியமிக்கப்பட்டிருந்த இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகித்த மூன்று மேஜர் ஜெனரல்களே பொன்சேகா மீதான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளை நடத்தினார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தேசத்தால் புகழப்பட்ட வீரர் ஒருவர் தேசத்துரோகத்தனமாக நடந்த குற்றச்சாட்டிற்காக தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இது மாத்திரமல்ல இதுபோன்று சம்பவங்கள் உலகின் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளன. முதலாவது உலக மகா யுத்தத்தின் போது வழிநடத்திய அந்நாட்டு தளபதி பலராலும் போற்றப்பட்டார். ஆனால் பல வருடங்களுக்கு பின்னர் அவர் ஹிட்லருக்கு இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இராணுவ நீதிமன்றத்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இருந்தாலும் அவரைக் கௌரவப்படுத்தும் வகையில் சாகும்வரை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் சிறையிலேயே உயிரிழந்தார். இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்கால சத்தியப் பிரமாண நிகழ்வு அநுராதபுர நகரில் நடைபெறும்..!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான சத்தியப் பிரமாண நிகழ்வு அநுராதபுர நகரில் நடைபெறுமென்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரமளவில் மிகவும் கோலாகலமான முறையில் நடைபெறவுள்ள சத்தியப் பிரமாண நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் மோசமான ஒரு சூழலில் 2005ம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி யுத்த நெருப்புக்களை தற்பொழுது வெற்றிகரமான முறையில் அணைத்துள்ளார். இதனையடுத்து அமோக வாக்குகளை அடுத்து ஜனாதிபதிக்கு மீண்டும் ஆணையை வழங்கிய மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பதவிக் காலம் முடிவுறும் இறுதிநாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலாவது கப்பல் வெள்ளோட்டம் விடப்படும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதன்போது தெரிவித்துள்ளார். அதேசமயம், ஜனாதிபதியை கௌரப் படுத்தும் வகையில் பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் அன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நமீதாவுக்கு கவர்ச்சி அலுத்து விட்டது..!!

நமீதாவுக்கு கவர்ச்சி அலுத்து விட்டதாம். குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்புவதாக கூறினார். நமீதாவின் சமீபத்திய தமிழ் படங்கள் அனைத்திலுமே கவர்ச்சி தூக்கலாக இருந்தது. ஆபாச கதையம்சம் உள்ள படங்களிலும் துணிச்சலாக நடித்தார். இதனால் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டது. இயக்குனர்கள் கவர்ச்சி கேரக்டர்களில் நடிக்கவே அவரை அணுகினர். இதனால் வருத்தமாகி இருந்தார் நமீதா.  தற்போது முதல் தடவையாக சண்டை படமொன்றில் குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதுபற்றி அவர் சொல்கிறார்.  என் சினிமா வாழ்க்கையில் போதுமான அளவுக்கு கவர்ச்சியாக நடித்து விட்டேன். அலுத்து விட்டது. கன்னட படங்களிலும் கவர்ச்சியாகத்தான் நடிக்க வைத்தார்கள்.  ஆனால் இப்போது முதல் தடவையாக கன்னட படமொன்றில் கவர்ச்சி இல்லாமல் யோகா ஆசிரியை வேடத்தில் நடிக்கிறேன். இதில் வில்லன்களுடன் சண்டை போடும் காட்சிகளும் உள்ளன. தொடர்ந்து இது போன்ற கேரக்டர்களில் நடிக்க விருப்பம் உள்ளது என்றார்.

கல்வியியல் கல்லூரிகளில் இருந்து பயிற்சி பெற்று வெளியேறும் 3000பேருக்கு ஆசிரியர் நியமனம்..!!

கல்வியியல் கல்லூரிகளில் இருந்து பயிற்சி பெற்று வெளியேறும் 3000பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்றத் தாழ்வு ஏற்படாத வகையில் ஜனவரி மாதம் முதல் ஆசிரியர் இடமாற்றங்களை செயற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் காணப் படும் ஆசிரியர் வெற்றிடங் களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 554 ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது தவிர அழகியற்கலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் போட்டிப் பரீட்சையூடாக ஆசிரியர்களை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3174 அழகியற்கலை ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஒக்டோபர் 9ஆம் திகதி போட்டிப் பரீட்சை நடத்தப்படும். இது தவிர கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் 3000பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கி ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர். சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதோடு, சில பாடசாலைகளில் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, இடமாற்றக் கொள்கையின் பிரகாரம் 8 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் பணி புரிந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு விடுதலையும் நல்லாசியும் கிடைக்க வேண்டுமென்று தலதாமாளிகையில் பூஜை..!!

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலையும் நல்லாசியும் கிடைக்க வேண்டுமென்றும் இன்று கண்டி தலதா மாளிகையில் விஷேட பூஜை ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொட்டி நாஹவிகாரையின் பிரதம குரு வண. மாதுலுவாவே சோபித தேரர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். பி.ப. 2.30 மணிக்கு இது ஒழங்கு செய்யப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்- பல்வேறு கொலைகளுக்குக் காரணமானவர்களும் மற்றும் முன்னர் பயங்கரவாதப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களுமான குமரன் பத்தமநாதன், தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றவர்கள் சுதந்திரமாக இருக்க நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த ஒரு தளபதி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது வருந்தத் தக்கவிடயம். எனவே அவரது விடுதலைக்காக நாம் பாடுபடவேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். கொட்டடி முத்தமிழ் மற்றும் வில்லூன்றி பகுதிகளின் அபிவிருத்தி மற்றும் அங்கு மேற்கொள்ளப்படவுள்ள முதலீட்டு நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு..!!

யாழ். மாநகர சபைக்குட்பட்ட மேற்குப் பகுதியான கொட்டடி முத்தமிழ் மற்றும் வில்லூன்றி பகுதிகளின் அபிவிருத்தி மற்றும் அங்கு மேற்கொள்ளப்படவுள்ள முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அப்பகுதியில் முதலீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்குடன் வருகை தந்திருந்த முதலீட்டுக் குழும ஆலோசகர் செல்வராஜா மற்றும் அப்பகுதி தரிசுநில உரிமையாளர் தேசபந்து ஆகியோரும் சமுகமளித்திருந்தனர். குறிப்பிட்ட பகுதியில் சுற்றுலா மையம் ஒன்று ஆரம்பிக்க விருப்பதாக தெரிவித்த முதலீட்டுக்குழும ஆலோசகர் அது தொடர்பான விபரங்க ளையும் தெரியப்படுத்தினார். யாழ். மாநகர பிரதேசத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பகுதியான அவ்விடத்தில் சுற்றுலா மையம் ஆரம்பிக்கப்படுவதன் மூலம் தரிசு நிலமான அப்பகுதியானது மேம்பாட டைவதுடன் அதனை அண்டியுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடைய விருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கு இந்திய அரசு 20லட்சம் ரூபாய் பெறுமதியான பஸ்வண்டி அன்பளிப்பு..!!

வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கு இந்திய அரசாங்கத்தனால் 20லட்சம் ரூபாய் பெறுமதியான பஸ்வண்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே பஸ்வண்டி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 மாணவர்கள் கல்விபயிலும் இப்பாடசாலையில் வாகனம் இன்மையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

நடிகர்களுக்கு பட்டப் பெயர் தேவை இல்லை - ஜீவா..!!

சிங்கம் புலி”, “கோ”, “ரவுத்திரம்”. ”வந்தான் வென்றான்” படங்களில் நடிக்கிறேன். “கோ” படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இதில் பழைய கதாநாயகி ராதா மகள் கார்த்திகா ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்துக்கான படப்பிடிப்பு நார்வேயில் சமீபத்தில் நடந்த போது பனிப்பொழிவில் மலை உச்சியில் பல மணி நேரம் சிக்கி உயிருக்கு போராடினோம். ஆபத்தான பள்ளத்தாக்கு ஓரத்தில் நடன காட்சியை எடுத்தனர். எனக்கு தலை சுற்றியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். ரவுத்திரம் படம் சீரியஸ் ஆன கதை. சத்யா படத்தில் கமலை பார்த்த மாதிரி என் கேரக்டர் இருக்கும். சூப்பர் குட் பிலிம்ஸ் எடுத்த “புது வசந்தம்” படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை. இந்த படத்தில் ஆர்யாவிடமும் நடிக்க கேட்டால் வருவார். தமிழில் தயாராகும் இந்தி 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க இயக்குனர் ஷங்கர் என்னை அழைத்து பேசினார். எனக்கும் அந்த படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளது. நடிகர்களுக்கு பட்டப்பெயர் தேவை இல்லை. எனக்கு மதுரையில் நடந்த விழாவில் இளைய கலை அரசன் என்ற பட்டம் கொடுத்தனர். அதை நான் பயன்படுத்துவது இல்லை. என் ஒரிஜினல் பெயரை விட வேறு பட்டங்கள் பெரிதானவை அல்ல.