பயனர்கள்.

ript>

செவ்வாய், 5 அக்டோபர், 2010

சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு அரசை வலியுறுத்துவதற்கான கையெழுத்துப் பெறும் நடவடிக்கை..!!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரி மக்கள் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஜனநாயக தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகின்றது.

ஜெனரல் பொன்சேகா சிறை சென்றபின் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்..!!

கடந்த வியாழக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் முதற்றடவையாக அவர் பாதுகாப்புடன் வெளியே கொண்டுவரப்பட்டிருந்தார். பத்திரிகையொன்றிற்கு கருத்துத் தெரிவித்திருப்பதன் மூலம் மக்களை வன்செயலுக்குத் தூண்டிய குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டிருப்பதாக பொன்சேகாவின் வழக்கறிஞர்கள் கூறினர். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது, சரணடைய வந்த புலி உறுப்பினர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக நீதிமன்றம் கண்டால் அவர் மற்றொரு 20வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும். ஆனால், தான் தெரிவித்த கருத்துகள் தவறாக மேற்கோள் காட்டப்பட்டிருப்பதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சீபா ஒப்பந்தம் குறித்த தகவல்களை அம்பலப்படுத்தப்பட வேண்டும்-இந்திய உயர்ஸ்தானிகர்..!!

சீபா ஒப்பந்தம் குறித்த தகவல்களை அம்பலப்படுத்தப்பட வேண்டுமென இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும், சரியான தகவல்கள் வெளிப்படுத்தாவிட்டால் ஒப்பந்தம் வெற்றியளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து பல நாடுகள் இன்னமும் முழுமையாக மீட்சியடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய நாடுகளில் இலங்கை சிறந்த பொருளாதார பின்னணியைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வர்த்தக மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சீபா உடன்படிக்கை வெளிப்படைத் தன்மையுடன் கைச்சாத்திடப்பட்டால் மட்டுமே அதிக நன்மைகளை எட்டமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது-தயான் ஜயதிலக்க..!!

சீனா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை இலங்கை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு காரணமாக மேற்குலக நாடுகளின் விமர்சனங்கள் மற்றும் அழுத்தங்களை வெற்றிகொள்ள முடிந்தததாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தகாலத்தில் ஆயுதங்களை வழங்கியுடன் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் குரல் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் போதும் இந்திய உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்குலக நாடுகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை வெற்றிகரகமாக முறியடிப்பதற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கியதாகவும், இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை குறுகிய காலத்தில் யுத்தரீதியாக தோற்கடிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்hளர். இதேவேளை, இந்தியாவை திருப்தி படுத்தும் அதேவேளை சீனாவிடமிருந்து உச்சளவு உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் நந்த கொடகே தெரிவத்துள்ளார். எனினும், சீனா, ரஸ்யா போன்ற நாடுகளின் நெருங்கிய உறவினால் மேற்குலக நாடுகள் அதிருப்தியுடன் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறையில் புலி உறுப்பினர்களால் ஜெனரல் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்-கரு ஜயசூரிய..!!

கொழும்பு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களினால் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை பார்வையிடுவதற்காக கரு ஜயசூரிய இன்றைய தினம் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விஜயம்செய்து பொன்சேகாவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் 30மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சரத் பொன்சேகாவிற்கு அச்சுறுத்தல் நிலவிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே சரத் பொன்சேகாவுக்குப் போதிய பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு..!!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரை உடன் அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச நேற்று கொழும்பில் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிலிருந்து வெளிநாட்டு இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்ததாகவும், இதனால் அவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க படையினர், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் முகாமிட்டுள்ளதை வெளிநாட்டு ஆக்கிரமிப்பாக காணாத அமெரிக்க தூதுவர், வடக்கு கிழக்கிலுள்ள இலங்கை இராணுவத்தினரை வெளிநாட்டு இராணுவமாக கணிப்பிடுகின்றார். இதனை பாரதூரமான விடயமாக கருதி கடும் இராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை கப்டனின் சடலம் கையளிப்பு..!!

மத்திய கிழக்குக் கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த கப்பல் கப்டனின் சடலத்தை சார்ஜா பொலிஸார் கப்பல் கம்பனி அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். இவரது சடலம் அடுத்து வரும் இரண்டொரு தினங்களில் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார். இலங்கை கப்டன் அடங்கலாக 8 இலங்கை மாலுமிகள் பயணித்த கப்பல்மீது கடந்தமாதம் 25ம் திகதி கடற்கொள்ளையர்களால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. இதில் கப்பல் கப்டன் கொல்லப்பட்டார். இவரது சடலத்தை சார்ஜா துறைமுகப் பொலிஸார் பொறுப்பெடுத்து விசாரணையின் பின்னர் கையளித்துள்ளனர். சார்ஜா பொலிஸாரும் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அபூதாபிக்கான இலங்கை கொன்சியூலர் பொலிஸாருடன் பேச்சு நடத்தியதையடுத்து இலங்கை பிரஜையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ் கைதடி முதியோர் இல்லத்தை புனர்நிர்மாணம் செய்ய 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..!!

யாழ் கைதடி பிரதேசத்திலுள்ள (சாந்தி நிலையம்) முதியோர் இல்லத்தை புனர்நிர்மாணம் செய்ய 15 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புனர்நிர்மாண பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மேற்பார்வையில் இயங்கிவரும் இந்த முதியோர் இல்லத்தில் சுமார் 140பேர் தங்கியுள்ளனர். இதற்குத் தேவையான சகல வசதிகளையும் உரியமுறையில் செய்துகொடுக்க திட்டமிட்டுள்ளோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த முதியோர் இல்லத்தின் கட்டடங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் ஜோடி அனுஷ்கா?..!!

மோகன் நடராஜன் தயா‌ரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தவர் இலியானா. இந்தப் படத்தை விக்ரம் கே.குமார் இயக்குவதாக இருந்து இறுதியில் அந்த வாய்ப்பு பூபதி பாண்டியனுக்கு போனது. அப்போதும் நான் ரெடி என்று கி‌‌ரீன் சிக்னல் கொடுத்தார் இலியானா.  ஆனால் பூபதி பாண்டியன் இயக்கத்திலும் நடிக்கவில்லை விக்ரம். அவர் நடிக்கவிருப்பது மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில்.  இயக்குனர்கள் மாறிய கால இடைவெளியில் இலியானாவின் கால்ஷீட் காலாவதியாக இப்போது அனுஷ்காவிடம் கதை சொல்லியிருக்கிறார் விஜய். கதை பிடித்திருப்பதால் விக்ரம் ஜோடி அனேகமாக அனுஷ்காதான் என்கிறார்கள்.

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இடமளிக்க முடியாது-திருமலையில் ஜனாதிபதி..!!

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இடமளிக்க முடியாது. அத்துமீறி செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு காணிகளைப் பலவந்தமாகக் கைப்பற்ற முயல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அத்தகையவர்களுக்குத் துணை போகக்கூடாது எனவும் அதிகாரிகளுக்குக் கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் திருமலை கடற்படைத்தளத்தில் நடைபெற்றது. அமைச்சர்களான ஏ. எல்.எம். அதாவுல்லா, பி. தயாரத்ன, பிரதியமைச்சர் வி.முரளிதரன், மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ரி. ஹஸனலி, பiர்சேகுதாவூத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தில் சட்ட விரோத குடியேற்றங்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் விடயம் குறித்து ஆராயவென குழுவொன்றை நியமிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது மூவின மக்கள் வாழும் மாகாணமாகும். தமிழ் மக்களுக்கோ சிங்கள மக்களுக்கோ அநீதி இழைக்கப்படமாட்டாது. சிறு சிறு பிரச்சினைகளை எவரும் இன ரீதியாகப் பார்க்கக்கூடாது. கிழக்கு மாகாணம் பல வருடங்களுக்குப் பின் பாரிய அபிவிருத்தி கண்டு வருகிறது. சகல பேதங்களையும் மறந்து, அரசியல் வாதிகள் மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சகலரும் பூரண பங்களிப்பை வழங்குவது அவசியம். மொழிப் பிரச்சினைகள் பெரும்பாலான பிரதேசங்களில் நிலவுகின்றன. அதற்குத் தீர்வுகாணும் வகையில் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் சிங்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக தமிழ் அதிகாரியையும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் மேலதிகமாக சிங்கள அதிகாரியையும் நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். கிழக்கு மாகாணத்தில் பாரிய நிதியை செலவிட்டு அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை நிவர்த்திக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கல்முனை பள்ளிவாசல் ஊடாக ஆயுதம் ஒப்படைப்பு..!!

சட்டவிரோத ஆயுதங்களைக் கையளிக்குமாறு கல்முனை பொலிஸார் விடுத்த அறிவித்தலுக்கிணங்க, கல்முனைக்குடி பள்ளிவாசலொன்றினூடாக ரி56 ரக துப்பாக்கியொன்றும், அதற்கான ரவைகளும் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் அறிவுறுத்தலுக்கிணங்க, அம்பாறை மாவட்ட வடக்கு உதவிப் பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் வீரசூரியவின் வழிகாட்டுதலின்கீழ், சட்டவிரோத ஆயுதங்களை பொது மக்களிடமிருந்துகளையும் மேற்படி, வேலைத்திட்டத்தினை தாம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது கூறியுள்ளார். கல்முனைப் பொலிஸ் நிருவாகத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றினை செப்டம்பர் 30ம்திகதிக்குள் தத்தமது பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்கனவே அறிவித்தலொன்றை விடுத்திருந்தார்.

12 தினங்களே வயது நிரம்பிய ஆண் குழந்தையை விற்ற தாய் கைது..!!

12தினங்களே வயது நிரம்பிய தனது ஆண் குழந்தையொன்றை 1லட்சம் ரூபாவிற்கு விலைபேசி, இறுதியில் 20ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் ஒருவரை பதுளை நகரில் வைத்து நேற்று முன்தினம் மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பசறை மடுல்சீமை ரோபேரி தோட்டத்தைச் சேர்ந்த 33வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையை விற்றுள்ளார். இப்பெண் தனது குழந்தையை சில தினங்களுக்கு முன்னர் பதுளை பொது வைத்தியசாலையில் வைத்து பிரசவித்துள்ளார். அதனையடுத்து கடந்த 2ம்திகதி குறித்த ஆண் குழந்தையை பதுளை நகரில் வைத்து திருமலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்றுள்ளார். இக்குழந்தை குடும்பத்தில் நான்காவது குழந்தையாகும். குழந்தையை எடுத்துச் சென்றவர்களையோ குழந்தையையோ நேற்று மாலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அமெரிக்காவின் 60பேர் கொண்ட வர்த்தகத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம்..!!

அமெரிக்காவிலிருந்து இலங்கை வரவுள்ள 60பேர் கொண்ட வர்த்தகத் தூதுக்குழு எதிர்வரும் 12ம்திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். ஐம்பது அமெரிக்கர்களையும், பத்து அமெரிக்க வாழ் இலங்கையர்களையும் கொண்ட உயர்மட்ட வர்த்தகத் தூதுக்குழு மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள முதலீடு தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ள இவர்கள் வட மாகாணத்திற்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படும் அமெரிக்க வர்த்தக தூதுக்குழு வடபகுதியில் முதலீடுகள் செய்வது குறித்து விரிவாக ஆராயப்படுமென ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத் தின் ஏற்பாட்டிலேயே இந்த தூதுக்குழு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது. 12ம்திகதி யாழ்ப்பாணத்திற்கு செல்ல வுள்ள இந்த வரல்த்தகத் தூதுக்குழு அச்சுவெலி கைத்தொழில் பேட்டை, மண்டத்தீவு, கேரதீவு மற்றும் தீவுப்பகுதி களுக்கும் வடபகுதியிலுள்ள கைத்தொழில் மற்றும் சுற்றுலா பிரதேசங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். வட பகுதிக்கு செல்லவுள்ள அதிகமான வர்த்தகர்களைக் கொண்ட வெளிநாட்டு உயர்மட்டத் தூதுக்குழு இதுவாகும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பெண் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பிலான வெள்ளைக்கொடி வழக்கு விபரம்..!!

சரணடையும் புலிகள் இயக்க சந்தேகநபர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தாபய ராஜபக்ச தனக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகாவை அவரது ரீட் அவென்யூ தேர்தல் அலுவலகத்தில் வைத்து கடந்த டிசம்பர் 8ம்திகதி பேட்டி கண்டபோது அவர் தன்னிடம் கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று டிரயர் அட்பார் விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவின் வாழ்க்கை, அவரது சுயவிபரங்கள் மற்றும் அவரது தேர்தல் பிரசாரம் பற்றி கேள்வி கேட்பதே எனது நோக்கமாக இருந்தது. எனினும் எனது கடைசி கேள்வி வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியதாக இருந்தது. அப்போது கோட்டாபய, பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவுக்கு தொலைபேசி மூலம் புலி சந்தேகநபர்கள் வெள்ளை கொடியுடன் சரணடைய வரும்போது அவர்களை கொல்லுமாறு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா என்னிடம் கூறினார். அதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வாறு பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவிடம் கூறிய சம்பவத்தை தலைப்புச் செய்தியாக போடுவதற்கு தீர்மானித்தேன் என்று சாட்சியமளித்தபோது பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார். தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளியா, சுத்தவாளியா என்று கேட்கப்பட்ட போது சரத் பொன்சேகா தான் சுத்தவாளி என்று அவர் கூறினார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ.டி.எம்.பி. வீரவௌ, எம்.எஸ்.ரமன் ஆகியோர் முன்னிலையிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டது. 1991ல் தான் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் சேவையாற்றியதாகவும் 1995 இலேயே தான் சண்டே லீடர் பத்திரிகையில் சேர்ந்ததாகவும் சாட்சி பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார். லசந்த விக்ரமதுங்கவின் அழைப்பின் பேரிலேயே தான் சண்டே லீடரில் சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு ஆதரவு வழங்க சண்டே லீடர் பத்திரிகையின் முகாமைத்துவம் தீர்மானித்ததையடுத்து தான் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தொடர்பாக சரத் பொன்சேகாவிடம் பேட்டி எடுத்ததாக அவர் கூறினார். பேட்டிக்கு டிசம்பர் 9ம்திகதி சரத் பொன்சேகா நேரம் ஒதுக்கியதாகவும், ஆனால் பின்னர் டிசம்பர் 8ம்திகதி மாலை 6.30 மணிக்கு தன்னை பேட்டி எடுக்க வருமாறு கேட்டுக் கொண்டதாக சாட்சியமளித்த பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார். பேட்டியின் போது சரத் பொன்சேகாவின் பல படங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வேறு சந்தேக நபர்கள் எவருடனும் இன்றி சரத் பொன்சேகாவை தனியாக நீதிமன்றத்துக்கு அழைத்து வருமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. சிரேஷ்ட சட்டத்தரணி நளின் லதுவாஹெட்டி கேட்டுக் கொண்டதையடுத்து இவ்வாறு அவர் தனியாக அழைத்துவரப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நாளை (06) பிற்பகல் 1.30 க்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.