பயனர்கள்.

ript>

வியாழன், 28 அக்டோபர், 2010

கொழும்பு - மட்டக்களப்பு இடையிலான ரயில் சேவை நேற்றுமுதல் வழமைக்குத் திரும்பியது..!!

கொழும்பு - மட்டக்களப்பு இடையிலான ரயில் சேவை நேற்றுமுதல் வழமைக்குத் திரும்பியதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயில் நேற்று முன்தினம் வெலிகந்தையில் வைத்து தடம்புரண்டது. மேற்படி புகையிரதம் தடம் புரண்டதையடுத்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த இரவு கடுகதி புகையிரதம் அதிகாலை 4.15 மணிக்கு வந்தடைய வேண்டிய நிலையில் நண்பகல் 11.45 மணிக்கே மட்டக்களப்பை வந்தடைந்ததாக மட்டு. புகையிரத நிலைய அதிகாரி கூறினார். கொழும்பு - மட்டக்களப்பு இரவு புகையிரத சேவை உட்பட அனைத்து சேவைகளும் வழமைபோன்று இடம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக் கடற்படைத் தளபதி இந்தியாவிற்கு விஜயம்..!!

இலங்கைக்க கடற்படைத் தளபதி வைஸ்அட்மிரால் திசர சமரசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்திய பாதுகாப்பமைச்சர் ஏ.கே.அன்தோனி மற்றும் இந்திய உயர்பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருடன் கடற்படைத்தளபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய கடற்படைத்தளபதி நிர்மல் வர்மாவின் அழைப்பினை ஏற்று இலங்கைக் கடற்படைத்தளபதி திசர சமரசிங்க 08நாள் வியஜமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். கடற்படைத் தளபதியுடன் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் இந்திய உயரதிகாரிகளை சந்தித்துள்ளார். இருநாட்டு கடற்படையினருக்கும் ஏனைய பாதுகாப்பு தரப்பினருக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முக்கிய படியாக இந்த விஜயத்தை கருதமுடியும் என பாதுகாப்பமைச்சு கூறியுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பொன்விழா நிகழ்வுகளிலும் கடற்படைத்தளபதி பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவப் படையணிகள் தமிழ்மக்களுக்காக 1700 வீடுகளை அமைத்து வழங்கியுள்ளனர்..!!

வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின்கீழ் இயங்கும் இராணுவப் படையணிகள் தமிழ்மக்களுக்காக 1700 வீடுகளை அமைத்து அதனை வழங்கியுள்ளனர். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த வீடுகள் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன. வன்னி கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் கமல் குணரத்னவின் வழிநடத்தலின்கீழ் இராணுவவள மற்றும் மனிதவளத்தின் ஒத்துழைப்போடு இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளைப் பெறும் பயனாளிகளில் கொல்லப்பட்ட புலிகளின் உறவினர்களும் அடங்குகின்றனர். இவர்கள் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மீள்குடியேற்றத்தின்போது வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள முடியாத குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளதாக கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி காலி வீதி சோதனைச்சாவடி முழுமையாக அகற்றப்பட்டது..!!

கொழும்பு, பம்பலப்பிட்டி காலி வீதியில் செயற்பட்டு வந்த வீதி சோதனைச்சாவடி நேற்றுமுதல் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் உபய மெதவள கூறியுள்ளார். இதன்படி, கொழும்பு நகரிலுள்ள பிரதான வீதி சோதனைச் சாவடிகளை படிப்படியாக களைவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதனை தொடர்ந்து வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக களைவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 நாளில் 28 சிகரெட் ஊதிய நீது..!!

ஆதிபகவன்' பட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து முடிந்தது. இப¢படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் நீது சந்திரா, சிகரெட்டுக்கு அடிமையானவராக நடிக்கிறார். ஒரு நாளைக்கு கணக்கில்லாமல் சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் கேரக்டராம். இதற்காக இவரை வைத்து ஒரு நாளில் படமான காட்சிகளில் 28 சிகரெட்டுகளை ஊதித் தள்ளியிருக்கிறார் நீது. "ஒரே சிகரெட்டை சும்மா பிடிப்பது போல செய்கை காட்டலாம் என நினைத்தேன். இயக்குனர் அமீர் நிஜமாக தம் அடிக்க சொன்னார். இது புது அனுபவமாக இருந்தது. மறுநாள் தொண்டை பாதித்து டாக்டரிடம் சிகிச்சை பெற்றேன்" என்றார் நீது சந்திரா.

ஏழுமாத காலமாக கடலில் தத்தளித்து உயிர்தப்பிய பேருவளை மீனவர் நாடு திரும்பினார்..!!

ஏழுமாத காலமாக கடலில் தத்தளித்து உயிர்தப்பிய பேருவளை மீனவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். கடந்த மார்ச் 19ம்திகதி நான்கு பேருடன் ஆழ்கடல் சென்ற டி.மகேஷ் பத்ம குமார மட்டுமே உயிருடன் மாலைதீவு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டார். நேற்று இலங்கை வந்த அவர் மாலைதீவு அரசுக்கு நன்றி களையும் தெரிவித்துக் கொண்டார். மாலைதீவில் துனுதுவா தீவில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இலங்கை விமான நிலை யத்தில் காலடி எடுத்து வைத் தமை தமக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி யதாகவும் இதற்காக உழைத்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதிகளவிலான இலங்கையர்களின் விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா நிராகரிக்கவுள்ளது..!!

அதிகளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவுள்ளன. புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கவென புதிதாக இரு தடுப்புமுகாம்கள் அமைக்கப்படுவதன்மூலம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அதிகளவு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அர்த்தமாகாது என அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். மதிப்பீடுகள் செய்யப்பட்டபின் அதிகளவான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சாத்தியமுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சகல புகலிடக் கோரிக்கையாளர்களும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். புகலிடக் கோரிக்கைக்கான சரியான காரணங்களை முன்வைக்கத் தவறும் இலங்கையர்கள் மீளவும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் நடமாடும் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இந்திய வியாபாரிகள் 20பேர் கைது..!!

யாழ்ப்பாணத்தில் நடமாடும் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இந்திய வியாபாரிகள் 20பேர் நேற்றுக்காலை கொழும்பில் இருந்துவந்த அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உரிய விஸா இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றுஅதிகாலை 4.30மணிக்கு இந்திய வியாபாரிகள் தங்கி இருந்த விடுதிகளுக்கு வெள்ளைநிற ஹைஏஸ் வாகனத்தில் சென்று இறங்கிய சிலர் தம்மைக் கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து அந்த விடுதிகளில் இந்திய வியாபாரிகள் தங்கியிருக்கிறார்களா? என்று விசாரித்தனர். விடுதி உரிமையாளர்களின் பதிலுக்குக் காத்திராமல் விடுதியிலுள்ள அறைகளுக்கும் சென்று தேடினர். பின்னர் விடுதிகளில் இருந்த இந்திய வியாபாரிகளின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த வாகனத்தில் அவர்களை ஏறும்படியும் பணித்தனர். ஆயினும் வியாபாரம் செய்த மிகுதிப் பணத்தை வாங்கவேண்டி இருப்பதால் சிறிதுநேரம் கால அவகாசம் தரும்படி கேட்டனர். அதன்படி திரும்பிச் சென்ற அதிகாரிகள் மீண்டும் 10மணியளவில் வந்து அவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். எனினும் இந்தக் கைதுச் சம்பவம் குறித்து தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று யாழ்ப்பாணம் பொலீஸார் தெரிவித்தனர்.

அங்குருவாதொட்ட யால செனசுன்கொட பகுதி வீடொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு..!!

அங்குருவாதொட்ட யால செனசுன்கொட பகுதி வீடொன்றிலிருந்து பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை கைக்குண்டொன்றை கைப்பற்றியுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பி வந்துள்ள இராணுவ வீரர் ஒருவரின் வீட்டிலிருந்தே இந்த கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்கிறது.

கன்னடத்தில் ரீமேக் ஆகிறது 'விண்ணைத் தாண்டி வருவாயா..!!

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிம்பு-த்ரிஷா நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் கன்னட ரீமேக்கை எடுக்க போகிறார் கவுதம் மேனன். மேலும் இந்த படத்தை அவரே தயாரிக்க போகிறாராம். படத்தில் த்ரிஷா வேடத்தில் திவ்யா நடிக்க போகிறார். தற்போது ஹீரோ தேடி வருகிறார் கவுதம்.