பயனர்கள்.
ript>
வெள்ளி, 8 அக்டோபர், 2010
போராட்டங்கள் மற்றும் சத்தியாகிரங்களில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவு..!!
கொழும்பு வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுத்தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டங்கள் மற்றும் சத்தியாகிரங்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, உடனடியாக அப்புறப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி, காவற்துறையினருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் எதிர்காலத்தில் அமைதியின்மை ஏற்படும் என முன்வைக்கப்பட்ட வாதத்தை கவனத்தில் கொண்டு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ள சிலர் சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறு கோரி சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கோரி கலாசார விவகார திணைக்களம் மற்றும் கறுவாத் தோட்ட காவற்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் ஸ்ரீநாத் பெரேரா, கித்சிறி காட்டப்பிட்டி உள்ளிட்டோர் சுதந்திரச் சதுக்கத்தில் சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரத் பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றம் விதித்துள்ள சிறைத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பெனர்களையும் இவர்கள் காட்சிப்படுத்தியுள்ளதாக காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அவர்களை அங்கிருந்து செல்லுமாறு காவற்துறையினர் கேட்டுக்கொண்ட போதிலும் அவர்கள் அங்கிருந்து செல்லாது தொடர்ந்தும் சத்தியாகிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சத்தியாகிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இடையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய சம்பவங்கள் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க சுதந்திரச் சதுக்க கட்டடத்திற்கும் அதன் சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். இதனால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அனுமதி தருமாறு காவற்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதனை கவனத்தில் கொண்ட நீதவான், சத்தியாகிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக காவற்துறையிருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக