பயனர்கள்.

ript>

வெள்ளி, 1 அக்டோபர், 2010

சரத் பொன்சேகாவின் சிறைத்தண்டனை குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..!!

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை அரசியல் ரீதியாக பழிவாங்கி அவருக்கு 30வருட சிறைத்தண்டனையைப் பெற்றுக் கொடுத்திருப்பதும் ஜனாதிபதியே அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டிருப்பதும் அருவருக்கத்தக்க செயலாகும். இது சர்வதேச மட்டத்தில் பல கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. இந்த இழிவான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் தேசிய சர்வதேச மட்டத்தில் பாரிய போராட்டங்களை நடத்தி பொன்சேகாவை விடுதலை செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வழங்கப்பட்டுள்ள இந்த சிறைத்தண்டனை குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் அவருக்கு எதிராக அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்திடமிருந்தும் அதன் போலியான நீதிபதிகளிடம் இருந்தும் இவ்வாறுதான் தீர்ப்பு வெளிப்படும் என்பதையும் நாம் முன்னரே அறிந்திருந்தோம். ஏனெனில் இராணுவ நீதிமன்றத்தின் செயற்பாடுகள் அவ்வாறு தான் அமைந்திருந்தன என்றும் அக்கட்சி விசனம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டில் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் முடிவுக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடும் நிகழ்வாக நடத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேக்கை வெட்டுவதற்கான கௌரவத்தை சரத் பொன்சேகாவுக்கே வழங்கியிருந்தார். அதுமட்டுமல்லாது இவரே சிறந்த இராணுவத் தளபதியென உலகுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். அவ்வாறான ஒரு இராணுவத் தளபதியைத்தான் இன்று ஜனாதிபதி சிறையில் அடைப்பதற்கு உத்தரவாதம் அளித்துள்ளார். போலியான இராணுவ நீதிமன்றத்தை அமைத்து அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் ஏற்றவகையில் இராணுவ நீதிமன்ற நீதிபதிகளை நியமித்து அதனடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பானது ஜீரணிக்க முடியாததும் அருவருக்கத்தக்கதுமாகும். ஐக்கிய தேசியக் கட்சி இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது; நிராகரிக்கின்றது. பொன்சேகா மீதான தீர்ப்பு இன்று சர்வதேச மட்டத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவருமே ஏதோவொரு வகையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு இராணுவத் தண்டனைக்குட்பட்டவர்களாவர். இவர்களாலேயே பொன்சேகாவுக்கு தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. இராணுவ நீதிமன்றத்தை அமைக்கும் உரிமையும் அதிகாரமும் அதேநேரம் நீதிபதிகளை தெரிவு செய்யும் உரிமையும் அதிகாரமும் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. இதன் பிரகாரமே யாவும் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் ஜனாதிபதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றமானது சட்டத்துக்கு உட்பட்டதல்ல என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த பாதுகாப்புச் செயலர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தூக்கில் இடுவேன் என்று கூறியிருந்தார். அப்படியானால் அவரை தூக்கில் போடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகத் தான் இந்த சிறைத்தண்டனை அமைந்திருக்கின்றதா எனக் கேட்கவிரும்புகிறோம். எனவே, சரத் பொன்சேகா இந்நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த இராணுவத் தலைவராவார். அவருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் வெளிப்படுத்தி பலதரப்பட்ட போராட்டங்களை நடத்துவற்கும் அவருக்கான நீதியையும் விடுதலையையும் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக