பயனர்கள்.

ript>

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது..!!

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட 26வயதுப் பெண்ணொருவரை அனுராதபுரம் பொலீசார் கைதுசெய்துள்ளனர். வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து 40 பொதுமக்களிடம் சுமார் 10மில்லியனுக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தங்காலையைச் சேர்ந்த இப்பெண் நீண்டகாலமாக றாகமையில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் கைதாகும்போது இவரிடமிருந்து 5லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும், போலி கடவுச்சீட்டும் பொலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி இலங்கை வருகை..!!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி இலங்கை வரவுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்திலும், அம்பாந்தோட்டையிலும் இரு விசா அலுவலகங்களை திறந்து வைக்கவுள்ளதுடன், வடக்கு கிழக்கு மக்களையும் சந்திக்கவுள்ளார்.

தாய்லாந்தில் தேடுதல் 61இலங்கையர்கள் கைது..!!

இலங்கையை சேர்ந்த 61 சட்டவிரோத குடியேற்றவாசிகள் தாய்லாந்து அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் தென் மாகாணத்தில் உள் சொங்ஹாலா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பு நடவடிக்கையின்போது 114பேர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். தமது வீசா காலவதியான நிலையில் இபர்கள் கைதுசெய்யப்பட்டதாக சொங்காலா பிராந்திய குடிவரவு பாதுகாப்புத் துறை தலைவர் தலைவர் புட்திபோங் குசிக்குள் தெரிவித்துள்ளார். கைதான அனைவரும் மூன்றாம் நாடொன்றுக்கு சட்டவிரோதமாக தப்பி செல்வதற்கு முயற்சித்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மாதத்தில் மட்டும் தாய்லாந்து அதிகாரிகளினால் இப்பாரு சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 128 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதைகள் தேவை - மம்தா..!!

ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதைகள் தேவை என்று நடிகை மம்தா மோகன்தாஸ் கூறினார். கேரளத்தைச் சேர்ந்தவர் மம்தா. தமிழில் சிவப்பதிகாரம், குசேலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, ஹிந்திப் படங்கள், விளம்பரப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தமிழ்ப் படத்தில் அவருக்கு வாய்ப்பளிக்க சில தயாரிப்பாளர்கள் அவரைத் தொடர்புகொண்டபோது நிபந்தனைகள் விதிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மம்தா கூறியதாவது: நாலு பாட்டுக்கு ஆடி, ஹீரோ பின்னாடி சுத்துகிற மாதிரி கேரக்டர் வேண்டாம். நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள கேரக்டரில் நடிப்பதென்று முடிவு செய்திருக்கிறேன். அதுபோன்ற படங்கள் எதுவும் அமையவில்லை. ஹீரோயினுக்கும் முக்கியத்துவமான கேரக்டர் வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. வேறு எந்த நிபந்தனைகளையும் நான் விதிக்கவில்லை என்றார் அவர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு சவூதி சிறையில் வாடும் ரிசானா நபீக்கை விடுவிக்கவென கையெழுத்துப் பெறும் நடவடிக்கை..!!

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள திருகோணமலை, மூதூர் யுவதி ரிசானா நபீக்கிற்கு சவூதி அரசு கருணை காட்டவேண்டுமென கோரும் மகஜரில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை இன்று மூதூர் பெருந்திடலில் நடைபெற்றுள்ளது. இதன்படி 25ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் கையொப்பங்கள் பெறப்படவுள்ளன. கையெழுத்துடன் கூடிய கருணைமனு சவூதி மன்னரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளை களைய அரசாங்கம் முன்வரவேண்டும்-அமெரிக்கா..!!

இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்புகளாலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதிலும் அனைத்துத் தரப்பினருக்குமிடையிலான முரண்பாடுகளைக் களைவது தொடர்பிலும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும், உதவிச் செயலாளருமான பிலிப் ஜே. குரோவ்லியே தெரிவித்துள்ளார். உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமானது நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. அதன்போது அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு முன்னேற்றத்துக்கான இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் வைத்தே இந்தக் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார். தேர்தல் மூலம் மாபெரும் மக்கள் பலமொன்றைப் பெற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் அனைத்து இன மக்களிடையேயும் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை முடுக்கி விட்டு, எல்லா மக்களினதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு செயற்படும் போதுதான் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயலகள் தொடர்பான விசாரணை குறித்த பேச்சுகள் உள்ளனவா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கத் தயங்கிய அவர், இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையான திறமைகள் விசேட பொறுப்புடமையாக மாறியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீனேரி கிராமத்தில் அரச காணிகளில் அத்துமீறி அமைக்கப்பட்டிருந்த 30தற்காலிக வீடுகள் படையினரால் இடிப்பு..!!

திருமலை கிண்ணியா பிரதேச சபைக்குச் சொந்தமான தீனேரி கிராமத்தில் அரச காணிகளில் அத்துமீறி அமைக்கப்பட்டிருந்த 30தற்காலிக வீடுகள் படையினரால் இடிக்கப்பட்டுள்ளன. விமானப்படையினரும் பொலீசாரும் வீடுகளை இடித்துள்ளனர். அரச காணியிலிருந்து வெளியேறுமாறு அரச அதிபரின் உத்தரவை மீறி வெளியேறாத நிலையில் இருந்தபோதே வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கைத் தொலைபேசிகளை சென்னைக்கு கொண்டுசென்ற இலங்கைப் பெண் கைது..!!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கைத் தொலைபேசிகளை உடலில் ஒட்டி மறைத்து சென்னைக்கு கொண்டுசென்ற இலங்கைப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரது பயணப் பொதிக்குள்ளிருந்து மூன்று செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது. இவை தீவிரவாதிகள் பயன்படுத்துபவை என்று பொலீசார் தெரிவித்துள்ளார். குறித்த யுவதி சென்னைப் பொலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் சீனர்கள் மோதல், ஒருவர் காயம்..!!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டதில் ஒருவர் காயங்களுடன் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டது தொடர்பில் நுரைச்சோலை அனல் மின்நிலையம் தொடர்பான பரபரப்பு இன்னும் நீங்காதநிலையில் சீனர்களின்...

உதயதாராவிடம் மன்னிப்பு கேட்டார் ஹீரோ..!!

பகவான்' படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.சைலேஷ் கூறியது: யுவராஜ், உதயதாரா நடிக்கின்றனர். கதைப்படி ஒரு காட்சியில் தன்னை ரவுடிகள் கிண்டல் செய்வதாக யுவராஜிடம் கூறுகிறார் உதயதாரா. அவரை அழைத்துக் கொண்டு கோபமாக செல்கிறார் யுவராஜ். உதயதாரா காண்பிக்கும் ஆட்களுக்கு சமூக சேவைக்கான பாராட்டு விழா நடப்பதை கண்டு அதிர்கிறார் யுவராஜ். தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து, உதயதாராவை யுவராஜ் கன்னத்தில் அறைய வேண்டும். அறைவதற்காக கை ஓங்கும்போது தன் மீது அடிபடாமல் இருக்க உதயதாரா முகத்தை திருப்ப வேண்டும். இதில் டைமிங் மிஸ் ஆனது. பளார் என கன்னம் சிவக்கும் அளவுக்கு அறை விழுந்தது. உதயதாரா அழுதுவிட்டார். உதயதாராவிடம் யுவராஜ் மன்னிப்பு கேட்டார். சிறிது நேரம் உதயதாரா அப்செட்டில் இருந்தார். அரை மணி நேரம் கழித்தே அந்த காட்சியை மீண்டும் படமாக்க முடிந்தது.

சனி, 30 அக்டோபர், 2010

கொழும்பில் பொலீசாரைத் தாக்கிய இரண்டு விமானப்படையினர் கைது..!!

கொழும்பு புறநகரான கல்கிசை பகுதியில் பொலீசாரைத் தாக்கிய இரண்டு விமானப்படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மது போதையில் இவர்கள் வந்த நிலையில் அங்கு பணியில் இருந்த போக்குவரத்துப் பொலீசார்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. கல்கிசைப் பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீசாரே இரத்மலானை விமானப்படைத் தளத்தில் பணியாற்றும் விமானப்படையினரால் தாக்கப்பட்டுள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மாணவர்கள் நீண்டகாலமாக சிறையில் வாடுவதுடன் இன்னும் பலர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாமல் இருக்கின்றனர்-மனோகணேசன்..!!

பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மாணவர்கள் நீண்டகாலமாக சிறையில் வாடுவதாகவும் இன்னும் பலர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாமல் இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதன்போது மாணவர்களிடம் கருத்து தெரிவித்த மனோகணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை முன்னணியின் தலைமையகத்தில் இன்றுமுற்பகல் சந்தித்து கலந்துரையாடினர். 12பேர் அடங்கிய மாணவர் தூதுக்குழுவினருடனான சந்திப்பில் மனோகணேசனுடன் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ராஜேந்திரனும், மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதனும் கலந்துகொண்டனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்மீது அரசாங்கத்தினால் நடத்தப்படும் அடக்குமுறை, ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ண நேற்று கைதுசெய்யப்பட்டமை, தற்சமயம் 30 மாணவர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளமை, சுமார் 200 பேர்வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் ஒன்றியத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு நேரடி விளக்கமளித்து ஆதரவு கோரும் கலந்துரையாடல் வரிசையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்தாவது, மாணவர்கள் மீதான அடக்குமுறைகளையும், உதுல் பிரேமரட்ண கைதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பில் மாணவர் அமைப்புகளுடனும், ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு எமது கட்சி தயாராக இருக்கின்றது. இந்த அரச அடக்குமுறை தமிழ் மாணவர்களையும், தமிழ் மக்களையும் பொருத்தவரையில் புதியவை அல்ல. இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியில் கடந்த 5 வருடங்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மாணவர்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். உங்களது புள்ளி விபரங்களில் இடம்பெற்றுள்ள எண்ணிக்கைகளைவிட பெருந்தொகையான தமிழ் மாணவர்கள் சிறைக்கூடங்களில் நீண்டகாலமாக வாடுகிறார்கள். இன்னும் பெருந்தொகையான தமிழ் மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதுள்ளார்கள். இதைவிட பெருந்தொகையான தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். யுத்தத்தினால் சகல விதமான கல்வி வளங்களையும் இழந்துள்ளார்கள். எமது மாணவர்கள் துன்புறும்பொழுது தென்னிலங்கையில் இருந்து உங்களது அமைப்புகள் உட்பட அரசியல் கட்சிகள் மத்தியில் இருந்து எமது மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு குரல் எழும்பவில்லை. எமது மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எனது தலைமையில் இங்கே தென்னிலங்கையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்பட்டன. இன்று உங்களுக்கு ஆதரவு வழங்கும் சில கட்சிகள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு என்னையும், எமது கட்சியையும் புலிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் வசைப்பாடினார்கள். ஆனால் இவற்றை மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் இன்று உங்களை உதாசீனப்படுத்தவில்லை என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். கடந்த காலங்களில் சிங்கள தரப்பிலும், தமிழ் தரப்பிலும் தவறுகள் நிகழ்ந்துள்ளன. இவை நிவர்த்தி செய்யப்படவேண்டும். எமது கட்சியை பொருத்தவரையில் அன்றும், இன்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்படுகின்றோம். தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு என தனித்தனி வழிகள் இன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒட்டுமொத்தமான அடக்குமுறைக்கு எதிராக அனைத்து இனத்தவரும் இணைந்துகொள்ளும் ஒட்டுமொத்தமான போராட்டத்தில் எமது கட்சி இணைந்துகொண்டுள்ளது. அதேபோல் உங்களது போராட்டங்களில் தமிழ் மாணவர்களதும், தமிழ் மக்களினதும் உணர்வுகளையும் இணைத்துகொள்ளுங்கள். இதற்கு பாலமாக செயற்படுவதற்கு நாம் தயார். என்று தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி

கல்லடி கடற்கரையோரத்தில் 66வயதுடைய ஆணொருவரின் சடலம் மீட்பு..!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி கடற்கரையோரத்தில் 66வயதுடைய ஆணொருவரின் சடலம் இன்று காலை 8மணியியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். கல்லடி திருச்செந்தூர் என்ற விலாசத்தைச்சேர்ந்த மைக்கல் ஞானபிரகாசம் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜே.வி.பி பல்கலைக்கழக மாணவர்களை போராளிகளாக மாற்ற முனைவதாக உயர்கல்வி அமைச்சர் தெரிவிப்பு..!!

ஜே.வி.பியானது பல்கலைக்கழக மாணவர்களை போராளிகளாக மாற்ற முனைவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியாத ஜே.வி.பியினர் மாணவர்களையும், பெற்றோர்களையும் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். உயர்கல்வியின் எதிர்கால வளர்ச்சியினைச் சீர்குலைத்து மாணவர்களை ஆயுதமேந்திய சந்ததிக்கு அழைத்துச்செல்லும் நடவடிக்கையை ஜே.வி.பி மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாத் திரைப்பட விழாவில் எந்திரன்..!!

பிரிட்டனின் பாத் திரைப்பட விழாவில் பங்கேற்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்றுள்ள எந்திரன். கடந்த 20 ஆண்டுகளாக பிரிட்டனில் நடக்கும் பெரிய சர்வதேச திரைப்பட விழாக்களுள் ஒன்று 'பாத் திரைப்பட விழா'. இந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடக்கும் இந்த திருவிழாவில், லிட்டில் தியேட்டர் எனும் அரங்கில் நவம்பர் 13-ம் தேதி, எந்திரன் (தமிழ்) திரையிடப்படுகிறது. கேன்ஸ், பெர்லின், ஷாங்காய் மற்றும் கனடிய திரைப்பட விழாக்களிலும் எந்திரன் பங்கேற்கவிருப்பதாகவும், அதற்கான அழைப்புக் கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையிலான பயணிகள் கப்பல்சேவை..!!

தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையிலான பயணிகள் கப்பல்சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பயணிகள் சேவைக்கு வேண்டிய உட்கட்டுமான வசதிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்படுத்தப்படவுள்ளன. நவம்பர் முதல்வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இப்பணிகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவடையும். தூத்துக்குடித் துறைமுக அதிகாரசபையின் பிரதித்தலைவர் சுப்பையா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்தக் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக 2004ம் ஆண்டு இருநாட்டு அரசுகளுக்குமிடையில் இணக்கம் காணப்பட்டது. எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இச்சேவை ஆரம்பிக்கப்படவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் அமைக்கப்படவுள்ள பயணிகளுக்கான சோதனை இடத்தில் கடவுச்சீட்டைப் பரிசோதிக்கும் கருவி, சுங்கப் பகுதி போன்ற பாதுகாப்புச் சோதனை முறைமைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இச்சேவை ஆரம்பிக்கப்பட்டால் இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே-சென்னை உயர்நீதிமன்றம்..!!

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 1986ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் கொல்லப்பட்டார். அப்போது அங்கு தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை 4வது மேலதிக நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்திற்கு வராததனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக 1994ல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்ய வேண்டுமென்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து தன்னை அந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கேட்டு டக்ளஸ் தேவானந்தா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி அக்பர்அலி இந்த வழக்கின் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை முடிந்து, அரசின் அறிக்கைக்காக தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் டக்ளஸ் தேவானந்தாமீதான கொலை வழக்கில், 1994ம் ஆண்டு அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உண்மைதான் என்றும், அவர் இப்போதும் ஒரு தேடப்படும் குற்றவாளியே என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

உதுல் பிரேமரட்ணவை நவம்பர் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு..!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ணவை எதிர்வரும் நவம்பர் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகோகொடை பொலிஸாரால் சிறிகொத்தவிற்கு எதிரில் கைதுசெய்யப்பட்ட உதுல் பிரேமரட்ண கோட்டே நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். பல்கலைக்கழகங்களில் அண்மைக்காலமாக நிலவிவரும் குழப்ப நிலைமைகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நீதிமன்றப் பிடியாணை உத்தரவின் பிரகாரம் பொலிஸாரால் உதுல் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். கஸ்தூரியார் வீதி சிறீ ஹயூரன் நகை மாடத்தில் திருட முயற்சித்த இருவரில் ஒருவர் சிக்கினார்..!!

யாழ்ப்பாணத்தின் நகரப்பகுதியில் கஸ்தூரியார் வீதியில் உள்ள சிறீ ஹயூரன் நகை மாடத்தில் பகல் 11.30 மணியளவில் இருவர் திருட முயற்சித்துள்ளனர். இதை அவதானித்த நகைக்கடை உரிமையாளர் அங்கு இருந்த இளைஞர்களின் உதவியுடன் திருடர்களை பிடிக்க முற்பட்டபோது இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல ஒருவர் பிடிபட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் ஆனால் பொலிசாரின் நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கன்றனர்.

பார்வை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு... அசின் மீது வழக்கு..!!

இலங்கையில், அசின் செலவில் நடந்த முகாமில் சிகிச்சை பெற்ற 10 பேர் முற்றாக பார்வை இழந்துள்ளனர். அவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அசின் மீது வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாமில் கண் அறுவை செய்து கொண்ட 10 பேர் பார்வை இழந்தனர். மேலும் 12 பேருக்கு வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்துக்குள் இதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

புத்தளம் பாலாவிக்கிடையில் ரயில் சேவைகள் பாதிப்பு..!

புத்தளம் பாலாவிக்கிடையில் தண்டவாளத்திலிருந்து ரயில் விலகியதில் ஏற்பட்ட பாதிப்பினால் தடைப்பட்டிருந்த புத்தளம் பாலாவி ரயில் சேவைகளால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நேற்றிரவு பாலாவிப் பகுதியில் ரயில் தடம்புரண்டமை குறிப்பிடத்தக்கது.

21 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

உயர்கல்வி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கடந்த 14ம் திகதி கைதான 21 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை எதிர்வரும் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் அலுவலக வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததுடன் பொருட்களுக்கும் சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் தங்கங்களைக் கடத்துவதற்கு முயற்சித்த இருவர் கைது..!

சட்டவிரோதமான முறையில் தங்கங்களை இந்தியாவுக்குக் கடத்துவதற்கு முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைதுசெய்துள்ளனர். இவர்களிடமிருந்து பத்து தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் உதுல் பிறேமரட்ண கைது..!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் உதுல் பிறேமரட்ண இன்றுமுற்பகல் கொழும்பு குருந்துவத்தைப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சி தலைமையகமான சிறீகோத்தாவில் சந்திப்பொன்றினை நடத்தச் சென்றிருந்த சமயம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வி அமைச்சு வளாத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தயாரான 02வது பயணிகள் கப்பல் இந்தியாவிடம் கையளிப்பு..!!

இலங்கையில் தயாரான 02வது பயணிகள் கப்பல் நேற்று இந்தியாவிடம் கையளிக்கப்பபட்டது. எம்.வி.லக்ஷத் வீப் சீ என்ற கப்பல் கொழும்பு டொக்யாட் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இரண்டாவது பயணிகள் கப்பலாகும். நேற்று இந்திய அரசாங்கத்திடம் இது கையளிக்கப்பட்டது. இது தொடர்பான விஷேட நிகழ்வு கொழும்பு துறைமுக கப்பல் தடாகத்தில் (டொக் யாட்) நடைபெற்றது. இந்நிகழ்வின்போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க வெள்ளியினால் தயாரிக்கப்பட்ட விஷேட ஞாபகச் சின்னத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார். இலங்கை- இந்திய கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த இந்தக் கப்பல் கொழும்பு துறைமுக கடற்பரப்பில் நேற்று முதன் முறையாக வெள்ளோட்டம் விடப்பட்டது. 89 மீற்றர் நீளமும் 630 மீற்றர் ஆழமும் கொண்ட இந்தக் கப்பலில் 250 பேர் பயணிக்க முடியும்.

கிளிநொச்சியில் இன்னும் 52 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளன-அரசஅதிபர்..!!

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 52 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பளை பிரதேச செயலகப்பிரிவில் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர்; இந்நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் எஞ்சியுள்ள மேற்படி குடும்பங்களும் மீள் குடியேற்றப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை 99 வீத மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள 59 குடும்பங்களிலும் 25 குடும்பங்கள் காணிகள் இல்லாதவர்கள். ஆகையால், அவர்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கிலிருந்துவரும் தமிழ்மக்களுக்குத் தெற்கில் வசதிகள் வழங்கப்படுமா?-சிவாஜிலிங்கம் கேள்வி..!!

வாரந்தோறும் தெற்கிலிருந்து வடபகுதிக்கு வரும் சிங்கள மக்கள், அரச பண்டகசாலைகளிலும், அரச பாடசாலைகளிலும் தங்க வைக்கப்படுகின்றனர். இதேபோன்ற வசதிகள், வடக்கிலிருந்துவரும் தமிழ்மக்களுக்குத் தெற்கில் வழங்கப்படுமா? என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 22,23,24ந் திகதிகளில், இலங்கை மருத்துவபீடமும், யாழ் மருத்துவ பீடமும் இணைந்து மாநாடு ஒன்றை, யாழ். பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் நடத்தியிருந்தன. அச்சமயம் அங்கு சுமார் 1000க்கும் மேற்பட்டோர் குழுமியதால் பெரும் கூச்சல் நிலவவே, மாநாட்டு மண்டபத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சிறு சச்சரவேற்பட்டது. நூலக ஊழியர்கள்மீது சிலர் தாக்குதல் நடத்தினர். புத்தகங்களையும் சேதப்படுத்தினர். அச்சமயம், சிலர், தாம் ஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்பவர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை மிரட்டினர். இது குறித்துப் பொலிஸாரும் இராணுவத்தினரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. இவ்வாறான சம்பவங்கள் வடக்கில் இன்று வாடிக்கையாகி விட்டன. தெற்கிலிருந்து வருவோர், இங்குள்ள அரச கட்டடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். இவர்கள் இங்குள்ள உணவகங்களுக்குச் சென்று அடாவடித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர். ஆயிரம் ரூபாவுக்கு மேல் கடைகளில் பொருட்கள் வாங்கும் இவர்கள், தாம் 1000 ரூபா மட்டுமே தருவோம் என்று கூறி, தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்துகின்றனர். தமது மாமன், மச்சான் எல்லோரும் இராணுவத்தில் உள்ளனர் என்று கூறி இவர்கள் தமிழ் மக்களையும், வர்த்தகர்களையும் பல வழிகளிலும் தொல்லைப்படுத்துகின்றனர். விடுமுறை நாட்கள் என்றால் இவர்களுக்குப் பாடசாலைகளில் இடம் ஒதுக்கித் தரப்படுகிறது. இதே சலுகையைத் தமிழ் மக்களுக்குத் தெற்கில் மட்டுமல்ல, வேறெந்த பகுதிகளிலாவது அரசாங்கம் செய்து தருமா?" என்று சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ரிசானா நபீக்கிற்கு மரணதண்டனை வழங்குவது கொடுமையான செயல்-சர்வதேச மன்னிப்புச் சபை..!!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு இவ்வாறானதொரு தண்டனையொன்றினை வழங்குவது கொடுமையான செயலென சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. இந்த இலங்கைப் பெண் குறித்த தவறினை சிறுவயதாக இருந்தபோது மேற்கொண்டுள்ளமையே அதற்கான காரணமென அந்நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் மெல்கொம் ஸ்மாட் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை- நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த ஆலோசனைப்படி இந்த ஆலோசனைக் குழுவுக்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியதாக அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு, அதன் இடைக்கால அறிக்கையை 2010.09.13ம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தது. 2010 ஓகஸ்ட் 11ம் திகதிமுதல் மேற்படி ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து சாட்சியங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சிபாரிசுகளை அரசு ஏற்கனவே படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் அதன் பரப்பளவை படிப்படியாக அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள காணிகள் அந்தந்த உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. உரிமையாளர்கள் இல்லாத காணிகள் சமூக அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படும். 2009 மே மாதமளவில் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 11,696 புலிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 5120பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிபார்சுகளில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவனவற்றையும் மக்களின் மொழி உரிமையை உறுதிப்படுத்துதல் உட்பட மற்றைய சிபார்சுகளையும் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இதற்கு ஏதுவாகவே இவ்வாலோசனைக் குழுவை நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு மலேசியா கமலுக்கு சிங்கப்பூர்..!!

உலக நாயகன் கமலஹாசன் நடித்து வரும் மன்மதன் அம்பு படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். படத்தில் த்ரிஷா கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் மன்மதன் அம்பு படத்தை உலகம் தழுவிய அளவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளார் படத் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின். எந்திரன் இசை வெளியீடு மலேசியாவின் கோலாலம்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு உலக அளவில் பிரமிப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் மன்மதன் அம்பு படத்தையும் வெகுசிறப்பாக வெளியிட முடிவு செய்துள்ளது ரெட் ஜெயண்ட் மூவிஸ். இதற்காக சிங்கப்பூரில் இசை வெளியீட்டை நடத்த ஏற்பாடுகளையும் அதிரடியாக செய்விட்டாராம் உதயநிதி. 
சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்போ அரங்கில் நவம்பர் 20 ந் தேதி இசைவெளியீட்டு விழா நடக்கவுள்ளது. இதில் படக்குழுவினர் அனைவருடன் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்கவிருக்கிறார்களாம். மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ள 500 க்கும் மேற்பட்ட ரசிகர்களை சிங்கப்பூருக்கு அழைத்து செல்லும் ஏற்பாட்டையும் படக்குழு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வியாழன், 28 அக்டோபர், 2010

கொழும்பு - மட்டக்களப்பு இடையிலான ரயில் சேவை நேற்றுமுதல் வழமைக்குத் திரும்பியது..!!

கொழும்பு - மட்டக்களப்பு இடையிலான ரயில் சேவை நேற்றுமுதல் வழமைக்குத் திரும்பியதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயில் நேற்று முன்தினம் வெலிகந்தையில் வைத்து தடம்புரண்டது. மேற்படி புகையிரதம் தடம் புரண்டதையடுத்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த இரவு கடுகதி புகையிரதம் அதிகாலை 4.15 மணிக்கு வந்தடைய வேண்டிய நிலையில் நண்பகல் 11.45 மணிக்கே மட்டக்களப்பை வந்தடைந்ததாக மட்டு. புகையிரத நிலைய அதிகாரி கூறினார். கொழும்பு - மட்டக்களப்பு இரவு புகையிரத சேவை உட்பட அனைத்து சேவைகளும் வழமைபோன்று இடம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக் கடற்படைத் தளபதி இந்தியாவிற்கு விஜயம்..!!

இலங்கைக்க கடற்படைத் தளபதி வைஸ்அட்மிரால் திசர சமரசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்திய பாதுகாப்பமைச்சர் ஏ.கே.அன்தோனி மற்றும் இந்திய உயர்பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருடன் கடற்படைத்தளபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்திய கடற்படைத்தளபதி நிர்மல் வர்மாவின் அழைப்பினை ஏற்று இலங்கைக் கடற்படைத்தளபதி திசர சமரசிங்க 08நாள் வியஜமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். கடற்படைத் தளபதியுடன் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் இந்திய உயரதிகாரிகளை சந்தித்துள்ளார். இருநாட்டு கடற்படையினருக்கும் ஏனைய பாதுகாப்பு தரப்பினருக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முக்கிய படியாக இந்த விஜயத்தை கருதமுடியும் என பாதுகாப்பமைச்சு கூறியுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பொன்விழா நிகழ்வுகளிலும் கடற்படைத்தளபதி பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவப் படையணிகள் தமிழ்மக்களுக்காக 1700 வீடுகளை அமைத்து வழங்கியுள்ளனர்..!!

வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின்கீழ் இயங்கும் இராணுவப் படையணிகள் தமிழ்மக்களுக்காக 1700 வீடுகளை அமைத்து அதனை வழங்கியுள்ளனர். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த வீடுகள் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன. வன்னி கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் கமல் குணரத்னவின் வழிநடத்தலின்கீழ் இராணுவவள மற்றும் மனிதவளத்தின் ஒத்துழைப்போடு இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளைப் பெறும் பயனாளிகளில் கொல்லப்பட்ட புலிகளின் உறவினர்களும் அடங்குகின்றனர். இவர்கள் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மீள்குடியேற்றத்தின்போது வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள முடியாத குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளதாக கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி காலி வீதி சோதனைச்சாவடி முழுமையாக அகற்றப்பட்டது..!!

கொழும்பு, பம்பலப்பிட்டி காலி வீதியில் செயற்பட்டு வந்த வீதி சோதனைச்சாவடி நேற்றுமுதல் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் உபய மெதவள கூறியுள்ளார். இதன்படி, கொழும்பு நகரிலுள்ள பிரதான வீதி சோதனைச் சாவடிகளை படிப்படியாக களைவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதனை தொடர்ந்து வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக களைவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 நாளில் 28 சிகரெட் ஊதிய நீது..!!

ஆதிபகவன்' பட ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து முடிந்தது. இப¢படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் நீது சந்திரா, சிகரெட்டுக்கு அடிமையானவராக நடிக்கிறார். ஒரு நாளைக்கு கணக்கில்லாமல் சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் கேரக்டராம். இதற்காக இவரை வைத்து ஒரு நாளில் படமான காட்சிகளில் 28 சிகரெட்டுகளை ஊதித் தள்ளியிருக்கிறார் நீது. "ஒரே சிகரெட்டை சும்மா பிடிப்பது போல செய்கை காட்டலாம் என நினைத்தேன். இயக்குனர் அமீர் நிஜமாக தம் அடிக்க சொன்னார். இது புது அனுபவமாக இருந்தது. மறுநாள் தொண்டை பாதித்து டாக்டரிடம் சிகிச்சை பெற்றேன்" என்றார் நீது சந்திரா.

ஏழுமாத காலமாக கடலில் தத்தளித்து உயிர்தப்பிய பேருவளை மீனவர் நாடு திரும்பினார்..!!

ஏழுமாத காலமாக கடலில் தத்தளித்து உயிர்தப்பிய பேருவளை மீனவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். கடந்த மார்ச் 19ம்திகதி நான்கு பேருடன் ஆழ்கடல் சென்ற டி.மகேஷ் பத்ம குமார மட்டுமே உயிருடன் மாலைதீவு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டார். நேற்று இலங்கை வந்த அவர் மாலைதீவு அரசுக்கு நன்றி களையும் தெரிவித்துக் கொண்டார். மாலைதீவில் துனுதுவா தீவில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கும் அவர் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இலங்கை விமான நிலை யத்தில் காலடி எடுத்து வைத் தமை தமக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி யதாகவும் இதற்காக உழைத்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதிகளவிலான இலங்கையர்களின் விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா நிராகரிக்கவுள்ளது..!!

அதிகளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவுள்ளன. புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கவென புதிதாக இரு தடுப்புமுகாம்கள் அமைக்கப்படுவதன்மூலம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அதிகளவு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அர்த்தமாகாது என அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். மதிப்பீடுகள் செய்யப்பட்டபின் அதிகளவான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சாத்தியமுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சகல புகலிடக் கோரிக்கையாளர்களும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். புகலிடக் கோரிக்கைக்கான சரியான காரணங்களை முன்வைக்கத் தவறும் இலங்கையர்கள் மீளவும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் நடமாடும் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இந்திய வியாபாரிகள் 20பேர் கைது..!!

யாழ்ப்பாணத்தில் நடமாடும் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இந்திய வியாபாரிகள் 20பேர் நேற்றுக்காலை கொழும்பில் இருந்துவந்த அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உரிய விஸா இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றுஅதிகாலை 4.30மணிக்கு இந்திய வியாபாரிகள் தங்கி இருந்த விடுதிகளுக்கு வெள்ளைநிற ஹைஏஸ் வாகனத்தில் சென்று இறங்கிய சிலர் தம்மைக் கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து அந்த விடுதிகளில் இந்திய வியாபாரிகள் தங்கியிருக்கிறார்களா? என்று விசாரித்தனர். விடுதி உரிமையாளர்களின் பதிலுக்குக் காத்திராமல் விடுதியிலுள்ள அறைகளுக்கும் சென்று தேடினர். பின்னர் விடுதிகளில் இருந்த இந்திய வியாபாரிகளின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த வாகனத்தில் அவர்களை ஏறும்படியும் பணித்தனர். ஆயினும் வியாபாரம் செய்த மிகுதிப் பணத்தை வாங்கவேண்டி இருப்பதால் சிறிதுநேரம் கால அவகாசம் தரும்படி கேட்டனர். அதன்படி திரும்பிச் சென்ற அதிகாரிகள் மீண்டும் 10மணியளவில் வந்து அவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். எனினும் இந்தக் கைதுச் சம்பவம் குறித்து தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று யாழ்ப்பாணம் பொலீஸார் தெரிவித்தனர்.

அங்குருவாதொட்ட யால செனசுன்கொட பகுதி வீடொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு..!!

அங்குருவாதொட்ட யால செனசுன்கொட பகுதி வீடொன்றிலிருந்து பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை கைக்குண்டொன்றை கைப்பற்றியுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பி வந்துள்ள இராணுவ வீரர் ஒருவரின் வீட்டிலிருந்தே இந்த கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்கிறது.

கன்னடத்தில் ரீமேக் ஆகிறது 'விண்ணைத் தாண்டி வருவாயா..!!

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிம்பு-த்ரிஷா நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் கன்னட ரீமேக்கை எடுக்க போகிறார் கவுதம் மேனன். மேலும் இந்த படத்தை அவரே தயாரிக்க போகிறாராம். படத்தில் த்ரிஷா வேடத்தில் திவ்யா நடிக்க போகிறார். தற்போது ஹீரோ தேடி வருகிறார் கவுதம்.

செவ்வாய், 26 அக்டோபர், 2010

அசினுக்கு இன்று 25வது பிறந்தநாள் டோனி, சல்மான், ஆமிர் வாழ்த்து..!

நடிகை அசின் பிறந்தநாளான இன்று கிரிக்கெட் வீரர் டோனி, இந்தி நடிகர்கள் சல்மான், ஆமிர் கான் கிப்ட் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்பாவிடம் இருந்து டொயோட்டா காரும், அம்மாவிடம் இருந்து வைர நெக்லசும் அசினுக்கு பரிசாகக் கிடைத்தது. நடிகை அசினுக்கு இன்று 25வது பிறந்த நாள். அப்பா ஜோசப் தோட்டம்கல் மகளுக்கு டொயோட்டா காரை அன்பு பரிசாக அளித்தார். அவரது அம்மா வைர நெக்லஸ் பரிசளித்தார். அசினின் சிறுவயது பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகள் தான்யா மற்றும் ரோஸ் இருவரும் ஆஸ்திரேலியாவிலிருந்து மும்பை வந்து கட்டித் தழுவி முத்தமிட்டு வாழ்த்து கூறி பரிசளித்தனர்.இதுபற்றி அசின் கூறும்போது, ‘வழக்கமாக பர்த்டே அன்னிக்கு அப்பா, அம்மா கூடத்தான் கொண்டாடுவேன். ஆடம்பர விழா நடத்துவதில்லை. எனது தோழிகள் தான்யா, ரோஸ் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தவறாமல் போனில் வாழ்த்து சொல்வார்கள். இம்முறை அவர்கள் இருவரும் நேரில் வந்துள்ளனர். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.ஆமிர்கான், சல்மான் கான் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். சாஹித் கபூர், நைல் நிதின் முகேஷ், ஹர்மான் பஜ்வா, நடிகை தபு உள்ளிட்டோர் வாழ்த்து கூறினார்கள். கல்கத்தாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் டோனி, யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக அசின் நேற்று மாலை பிறந்தநாள் பார்ட்டி வைத்திருந்தார். அதில் பட அதிபர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர். இன்று நடக்கும் பார்ட்டியில் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.

முல்லைத்தீவில் 120 குடும்பங்ள் இன்று மீள்குடியேற்றம்..!!

முல்லைத்தீவில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் இன்று மீள்குடியேற்றப்படுவதாக அரச அதிபர் என். வேதநாயகம் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி டிசம்பர் 31ம் திகதிக்கு முன் மீள்குடியேற்றங்களை நிறைவு செய்யவுள்ளதாகவும் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 75வீதமான மீள்குடியேற்றப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளில் 120குடும்பங்களைச் சேர்ந்த 450பேர் மீள்குடியேற்றப்பட உள்ளனர். ஒட்டுசுட்டானில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் புதுக்குடியிருப்பில் 14 கிராமசேவகர் பிரிவுகளிலும் கரைதுரைப்பற்றில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளளது. இந்துபுரம் திருமுருகண்டி மேற்கு பனிச்சங்குளம் மாங்குளம் ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளின் தீர்வுத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் முன்வைக்கப்படும்-எம்.கே.சிவாஜிலிங்கம்..!!

தேசிய இனப்பிரச்சினைக்கான தமிழ் அரசியல் கட்சிகளின் தீர்வுத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் முன்வைக்கப்படும் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் 10தமிழ் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இக்கட்சிகளில் ஈ.பி.டி.பி. பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா மட்டும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். எதிர்வரும் சனிக்கிழமை மீளவும் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இதுவரையில் பத்து சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளது. சந்திப்புக்களில் சாதமானநிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 28 அல்லது 29ம் திகதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதன்போது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளது என்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதை இந்தியா ஒப்புக்கொண்டது..!!

புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதை முதல் தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசு இதுவரை இறப்புச் சான்றிதழ் எதையும் அனுப்பவில்லை. மாறாக, பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற கடிதத்தை நீதிபதி ஒருவரின் அத்தாட்சியுடன் அனுப்பி வைத்தது. இதனை ஏற்றதாகவோ, மறுப்பதாகவோ இந்திய அரசு தெரிவிக்காமலிருந்தது. சிபிஐயின் இணையத் தளங்களில், ராஜீவ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் சண்முகநாதன் சிவசங்கரன் பெயர்கள் நீக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், இப்போது இந்த இருவரது பெயரையும் ராஜீவ் கொலை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாகவும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது. சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப்பில், முதன்மைக் குற்றவாளி வேலுப்பிள்ளை பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

யாழ். தீவகம் மண்டைதீவில் கைத்தொழில் பேட்டை மற்றும் முதலீட்டுத் திட்டம்..!!

யாழ். தீவகம் மண்டைதீவில் கைத்தொழில் பேட்டை மற்றும் முதலீட்டுத் திட்டம் ஆரம்பிப்பது குறித்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி இருவரும் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர். இதன்பிரகாரம் யாழ். நகருக்கு மிக அண்மையாக காணப்படுவதும் தரைவழிப் போக்குவரத்து தொடர்புடையதுமான மண்டைதீவின் வடக்குப் பிரதேசத்தில் காணப்படும் அரச காணிகளை மேற்படி திட்டத்திற்கு பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. சமாதானம் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டாளர்களும் புலம்பெயர்ந்தவர்களும் இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் - ஹரியின் வேங்கை..!!

இடையில் ரஜினி படம் இயக்கக் கூடும் என்று கூறப்பட்டதால் இந்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் ஹரி. ரஜினி படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்குவது உறுதியாகியுள்ளதால், நடிகர் தனுஷும், ஹரி படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு வேங்கை எனப் பெயர் சூட்டியுள்ளனர். இதில், தனுஷ் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். விஜயா வாஹினி சார்பில் வெங்கட்ராம ரெட்டி தயாரிக்கிறார். படத்தை பற்றி இயக்குநர் ஹரி கூறுகையில், "கோபக்காரன் அரிவாள் எடுத்தால் தப்பு. காவல்காரன் அரிவாள் எடுத்தால் தப்பு இல்லை என்ற ஒரு வரிதான் கதை.
இந்த படத்தில் தனுஷ் ஒரு கிராமத்து கோபக்கார இளைஞராக நடிக்கிறார். தமன்னா, கிராமத்து பெண்ணாக வருகிறார். சிவகங்கை மாவட்டத்தை பின்புலமாக வைத்து கதை அமைக்கப்பட்டிருப்பதால், படப்பிடிப்பையும் அங்கேயே நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்...,'' என்றார்.
இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் அருவா. இந்தப் பெயர் லேசாக வெளியாகி, ஏக கிண்டலுக்குள்ளானதால் கடுப்பான ஹரி, இப்போது வேங்கை என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

பிரதமர் டி.எம்.ஜயரத்ன கொரிய தூதக்குழுவுக்கும் இடையில் சந்திப்பு..!!

பிரதமர் டி.எம்.ஜயரத்னவுக்கும் கலாநிதி லீ ஜூன்கென் தலைமையிலான கொரிய தூதக்குழுவுக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கம்பளை அம்புலுவாவ பல்சமய மத்திய நிலையத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மாணவர்களின் கணிணிப் பாவைனை வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கொரியத் தூதுக்கழு இதன்போது பிரதமரிடம் தெரிவித்துள்ளது. இதன்போது நினைவுச் சிண்ணம் ஒன்றையும் பிரதமர் வழங்கினார். கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

நுண்கலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை..!

நுண்கலைப்பட்டதாரிகள் 3174 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற போதும் நேர்முகப் பரீட்சையொன்றின் மூலம் தகுதிகள் உறுதிசெய்யப்பட்ட பின்னரே ஆசிரிய நியமனம் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதனால் உடனடியாக ஆசிரியர் நியமனங்களை வழங்க முடியாது. அதற்கு சில நியமங்கள் உள்ளன. கடந்த 9ம் திகதி போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் தகுதியானோரைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 15ம் திகதி நடாத்தப்படவுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கே ஆசிரிய நியமனம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீட்டுச் சூழலை அசுத்தமாக வைத்திருந்தவருக்கு 4 மாத கடூழிய சிறை..!!

டெங்கு நுளம்பு பரவும் வகையில் வீட்டு சுற்றுச் சூழலை அசுத்தமாக வைத்திருந்த வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு கண்டி மஜிஸ்திரேட்டினால் 4 மாத கடூழியச் சிறைத் தண்டனையும் 1500 ரூபா தண்டப்பணமும் செலுத்தும் படியும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தீர்ப்பை மீள் பரிசீலனைக்காக கண்டி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது மாவட்ட நீதவான் பீர்த்தி பத்மன் ஏலவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பையே உறுதி செய்யப்பட்டு மீள் பரிசீலனை நிராகரிக்கப்பட்டுள்ளது. மெனிக்கின்ன பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பாவித்த பழைய டயரொன்றுள் நுளம்பு பரவும் வகையில் அது அமைந்துள்ளமை குறித்து மெனிக் கின்ன பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.

நாட்டின் மீன் ஏற்றுமதிமூலமான வருமானத்தை 2100 கோடியிலிருந்து 50000 கோடி ரூபாவாக அதிகரிக்கத் திட்டம்..!!

நாட்டின் மீன் ஏற்றுமதிமூலமான வருமானத்தை 2100 கோடியிலிருந்து 50000 கோடி ரூபாவாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் இந்த இலக்கையடைய எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தகவல் தணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மீன் பிடித்துறை மூன்றாம் இடத்தில் உள்ளது. மீன்பிடித்துறை 18.3 வீத பொருளாதார வளர்ச்சியைக் கொணடுள்ளது. இதனை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச சட்டத்துக்கு எற்ப மீன்பிடித்துறை நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் பாவனையாளர்கள் கடற்றொழிலாளர்கள் சர்வதேச சட்டதிட்டத்துக்கு ஏற்ப மீன்பிடித்துறையை ஏற்படுத்தல் ஆகிய அம்சங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும். 2009ஆம் ஆண்டு தனிநபர் ஒருவரின் வருடாந்த மீன் பாவனை 11.4 கிலோவாகும். இதனை 2013இல் 21.9 கிலோவாக அதிகரிக்க உத்தேசிக்கப்படுகிறது. அற்கேற்றாற்போல் 2009ல் நாட்டின் மீன் உற்பத்தியான 339730 மெட்ரிக் தொன்னை 2013 இல் 685690ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு;ள்ளது. மக்களுக்கு மலிவாகவும் இலகுவாகவும் மீன் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சீ ஃபிஷ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் ஊடாக மீன் கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறவுள்ளது. இலங்கையின் ஆழ்கடல் பிரதேசங்களில் ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகள் மீன்பிடித்து வருகின்றன. அவற்றைத் தடுத்து அப்பகுதி மீpன்களை ஏற்றுமதி செய்து நாட்டின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யவும் உத்தேசித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நமீதா கடத்திய கார் டிரைவர் - திருச்சியில் பரபரப்பு..!!

தமிழ் ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக திகழும் நமீதா நமீதா. திருச்சி விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்டார். சினிமாவில் நடித்த நேரம் போக மீதி நேரங்களில், நமீதா பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்கிறார்.

அழைப்பு

முன்னாள் கதாநாயகனும், மூத்த நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய மானேஜர் ஜானும் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர்.

டிரைவர் உடையில்...

அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து வரவேற்றார். ``கரூர் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துச்செல்ல என்னைத்தான் அனுப்பி இருக்கிறார்கள்'' என்று நமீதாவிடம் கூறினார். அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினார். உடனே காரை மின்னல் வேகத்தில் அந்த இளைஞர் ஓட்டிச் சென்றார்.

அதிர்ச்சி

நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச்செல்ல வந்திருந்த டிரைவர், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரை பின்தொடர்ந்தார். இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு `செல்போன்' மூலம் தகவல் கொடுத்தார். அதை தொடர்ந்து விழா குழுவினர் கரூரில் இருந்து ஐந்தாறு கார்களில் திருச்சியை நோக்கி விரைந்தார்கள். நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கினார்கள். நமீதாவை கடத்த முயன்ற போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.

ரசிகர்

போலீசில் பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியை சேர்ந்தவர். அவர் நமீதாவின் தீவிர ரசிகர் என்றும், நமீதா மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக அவரை தன் காரில் அழைத்து சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.